காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்களின் பேரணியில் பாகிஸ்தான் தேசியக்கொடி ஏந்திச் சென்ற விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும் என அந்த மாநில முதல்வர் முப்திமுகமது சையது தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம், ஸ்ரீ நகரில் பிரிவினைவாத தலைவர்கள் நேற்று முன்தினம் பேரணி நடத்தினர். அப்போது பாகிஸ்தான் கொடி ஏந்திச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஹுரியத் தலைவர் சையது அலிஷா கிலானி, மஸ்ரத் ஆலம்பட் உள்ளிட்ட பல்வேறு பிரிவினைவாத தலைவர்கள் மீது நேற்று முன்தினம் இரவு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்தவிவகாரம் குறித்து நிருபர்களிடம் முதல்வர் முப்திமுகமது சையது நேற்று கூறியதாவது:

பிரிவினைவாத தலைவர்கள் நடத்தியகூட்டத்தில் தேசவிரோத நடவடிக்கைகள் நடந்துள்ளதாக தெரியவருகிறது. யாராவது தவறு செய்திருந்தால் சட்டம் தனதுகடமையை செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

இது குறித்து காவல் துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:

கிலானி பட், பஷீர் அகமது பட் என்கிற பீர் சைபுல்லா மற்றும் இதர பிரிவினைவாத தலைவர்கள் மீது ஆத்திர மூட்டும் செயல்களில் ஈடுபட்டதாகவும் ஹைதர் புரா பகுதியில் பாகிஸ்தான் தேசியக்கொடி கொண்டு சென்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில் இருந்த சில சமூகவிரோதிகள் சிஆர்பிஎப் வாகனங்கள் மீது கல்லெறிந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மக்களின் உயிருக்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாப்புப் படை வீரர்கள் நிதானத்தை கடைபிடித்தனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply