பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாடுகள் அரசுமுறைப் பயணம் குறிப்பிடத்தக்க சாதனைப் பயணம் என்றுதான் கூற வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் அனைத்திலும் இந்தியாவின் வளர்ச்சிக்கும், அதிகரித்த அன்னிய முதலீட்டுக்கும் வழிகோலும் ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்படுகின்றன. சமீபத்திய பிரான்ஸ், ஜெர்மனி, கனடா நாடுகளுக்கான பயணங்களிலும் அதே முனைப்பைக் காண முடிகிறது.

பிரான்ஸூடன் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம், ஏர்பஸ் நிறுவனம் இந்திய துணை நிறுவனங்களை உதிரிப் பாகத் தயாரிப்புக்குப் பயன்படுத்திக் கொள்ளும் அழைப்பு, ஜெர்மன் தொழிலதிபர்களுடன் மனம்திறந்த பேச்சு, கனடாவுடன் 3,000 டன் யுரேனியத்துக்கான ஒப்பந்தம் எல்லாமும் – நட்பு, தொழில் உறவு, இந்திய வளர்ச்சி ஆகியவற்றை மையப்படுத்தியதாக அமைந்திருக்கின்றன.

வழக்கம்போல, எதிர்க்கட்சிகள் இந்தப் பயணம் தொடர்பான மாற்றுக் கருத்துகளை முன்வைக்கின்றன. குறை காண்கின்றன. குறிப்பாக, ரஃபேல் போர் விமானம் தொடர்பாகப் பல விதமான விமர்சனங்களை முன்வைக்கின்றன. இருப்பினும், ராணுவம் சார்ந்த அமைப்புகள், நிறுவனங்கள், ஆளுமைகள் சிலரும் "இது காலத்தின் கட்டாயம்' என்றும், பிரதமர் மோடி எடுத்துள்ள நடவடிக்கை சரியே என்றும் ஆதரவான கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

இந்திய விமானப் படையில் போர் விமானங்கள் போதுமான அளவு இல்லாத சூழலில், இந்த முடிவு மிக இன்றியமையாத உடனடித் தேவை. மேலும், ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் இல்லாமல், பிரெஞ்சு அரசும் இந்திய அரசுமே நேரடிக் கொள்முதலில் ஈடுபடுவது, ராணுவக் கொள்முதலில் குறிப்பிடத்தக்க மாற்றம். "இனி இது தொடரும்' என்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினால் இந்திய விமானப் படைக்குத் தேவையான "நடுத்தர பன்முகப் போர் விமானங்கள்' 126 எண்ணிக்கையில் வாங்குவதற்கான உலக ஒப்பந்தப்புள்ளி 2007-இல் வெளியிடப்பட்டு, குறைந்த விலை தெரிவித்த பிரான்ஸ் நாட்டின், தஸ்ஸல்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் ரஃபேல் விமானங்களை வாங்குவது என முடிவு எடுக்கப்பட்டது. இது இத்தனை ஆண்டுகளாக நடைமுறைக்கு வரவே இல்லை. இடைப்பட்ட காலத்தில் இந்த விமானத்தின் விலை இரண்டு மடங்காக அதிகரித்ததுதான் மிச்சம்.

பிரதமர் மோடி தற்போது 36 ரஃபேல் விமானங்களை "பறக்கத் தயார் நிலை'யில் வாங்கவும், மற்ற 90 விமானங்களை இந்தியாவில் உள்ள நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவிலேயே தயாரித்து வழங்கவும் ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஏற்கெனவே ஒப்பந்தப்புள்ளி மூலம் சென்ற அரசினால் எடுக்கப்பட்ட முடிவு, இந்த ஒப்பந்தம் காரணமாக ரத்து ஆகிறது.

தஸ்ஸல்ட் ஏவியேஷன் நிறுவனத்துடனான ஒப்பந்தம் இத்தனைக் காலமாக இழுபறி நிலையில் இருந்ததற்குக் காரணம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் இந்தப் போர் விமானங்

களைத் தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனைதான். ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் தங்கள் போர் விமானத்தைத் தயாரிக்கப் போதுமான உள்கட்டமைப்பு இல்லை என்பதால் தஸ்ஸல்ட் ஏவியேஷன் நிறுவனம் தயக்கம் காட்டி வந்தது. தற்போது இந்த நிபந்தனையில் பிரதமர் மோடி தளர்வு செய்துள்ளார். இந்தியாவில் ராணுவக் கருவிகள் தயாரிக்கும் எந்தவொரு நிறுவனத்துடனும் தஸ்ஸல்ட் ஏவியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கலாம். ஒரே நிபந்தனை: அந்த நிறுவனத்தின் 51% முதலீடு இந்திய நிறுவனத்துடையதாக இருக்க வேண்டும்.

இந்திய அரசு, ராணுவத் தளவாட தயாரிப்பு நிறுவனங்களை நிறுவுவதற்கு அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்திருக்கும் நிலையில், அந்தத் தளவாடங்களுக்கான 30% உதிரிப் பாகங்கள் தயாரிப்பில் இந்திய நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆகவே, தஸ்ஸல்ட் நிறு

வனம் இந்தியாவில் எந்த நிறுவனத்துடன் இணைந்து ரஃபேல் போர் விமானத்தைத் தயாரித்தாலும், 30% உதிரிப் பாகங்கள் தயாரிப்புகளை இந்தியாவிலேயே செய்ய வேண்டியதாக இருக்கும். 126 விமானங்களின் மொத்த கொள்முதல் விலை தோராயமாக ரூ.90,000 ஆயிரம் கோடி என்றால், ரூ.27,000 கோடி அளவுக்கு இந்திய நிறுவனங்களில்தான் உதிரிப் பாகங்களைத் தயாரிக்க வேண்டும்.

ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் ராணுவத் தளவாட நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யும்போது, மறைமுக கமிஷன்கள், கையூட்டு என முறைகேடுகள் நடைபெறுவது இயல்பு. போபர்ஸ் ஊழல் முதல் அண்மையில் இத்தாலியின் சொகுசு ஹெலிகாப்டர் வாங்கியது வரை, ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் ராணுவத் தளவாடங்கள் வாங்கும்போதெல்லாம் ஊழல் புகார்களும் வெளிப்பட்டன.

ராணுவத் தளவாட வர்த்தகத்தில் இரண்டு நாடுகளின் அரசுகளே நேரடியாக ஒப்பந்தம் செய்துகொள்வது என்கிற நரேந்திர மோடி அரசின் முடிவு இதுபோன்ற ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். ஒப்பந்தப்புள்ளி கோரும்போது, போட்டி காரணமாக விலையைக் குறைத்து நிர்ணயிக்கும் வாய்ப்பை நேரடிக் கொள்முதலில் இழக்க நேரிடும் என்ற வாதத்தில் உண்மை இருக்கலாம். ஆனால், கூடுதல் விலை கொடுத்தாலும்கூட ஒரு நாட்டுடன் நேரடியாக வர்த்தகம் செய்யும்போது, அந்த நாட்டுடனான ராஜிய உறவு வலுவானதாக மாறுகிறது என்கிற நன்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ராணுவத் தளவாட வர்த்தகத்தில் கையாளப்படும் இந்தப் புதிய அணுகுமுறைதான் பிரதமரின் மூன்று நாடுகள் விஜயத்தின் சிறப்பம்சமாக சரித்திரத்தில் பேசப்படப் போகிறது.

நன்றி; தினமணி

Leave a Reply