திறன்சார்ந்த பயிற்சிகள் அளிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் பல்கலை கழகம் அமைக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் ராஜிவ்பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின்கீழ் மருத்துவ துறையில் திறன்சார்ந்த பயிற்சியை அளிக்கும் திட்டம் அப்பல்லோ மருத்துவ மனையில் நேற்று தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரதாப் ரூடி பேசியதாவது: இந்தியாவில் பொறியியல் படித்த 50% பேரும், மேலாண்மை படித்த 70% பேரும் வேலைஇல்லாமல் உள்ளனர். எனவே திறன்சார்ந்த பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.

சீனாவில் 46%, ஆஸ்திரேலியாவில் 65% பேர், ஜெர்மனியில் 74% பேர், ஜப்பானில் 80% பேர், தென் கொரியாவில் 96% பேர் திறன்சார்ந்த பயிற்சிகளை பெற்றுள்ளனர். ஆனால் இந்தியாவில் வெறும் 2% பேர் மட்டுமே இத்தகைய பயிற்சிகளைப் பெற்றுள்ளனர்.

இந்தியாவில் 12 கோடி பேருக்கு திறன்சார்ந்த பயிற்சி தேவைப்படுகிறது. அதில் வெறும் 30% பேர்மட்டும் அதற்கான செலவை ஏற்கும் நிலையில் இருக்கின்றனர். எஞ்சியுள்ள 70% பேருக்கு பயிற்சி அளிப்பதற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசுக்கு ரூ. 4.5 லட்சம் கோடி செலவு ஏற்படும். திறன்சார்ந்த பயிற்சிகளை மேலும் முன்னேற்றுவதற்கு மத்திய தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வந்த 12 ஆயிரம் ஐடிஐ. பயிற்சி நிறுவனங்கள் மத்திய திறன்மேம்பாடு, தொழில்முனைவோர் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திறன் சார்ந்த பயிற்சிகளுக்கென்று ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கும் திட்டம் உள்ளது. இதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதுகுறித்து திட்டமிட்டு வருகிறோம். அப்பல்லோ மருத்துவ மனையின் சார்பில் 1 லட்சம் பேருக்கு மருத்துவத்துறையில் திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு ராஜிவ் பிரதாப் ரூடி கூறினார்.

Leave a Reply