திருத்தி அமைக்கப்பட்டுள்ள நிலம் கையகப் படுத்தும் மசோதாவை காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர் கட்சிகளும் ஆதரிக்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்த மசோதா உட்பட பல்வேறு முக்கிய மசோதாக்கள் நாடாளு மன்றத்தின் வரும் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ளன. நிலம் கையக மசோதாவுக்கு காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும். உலகவளர்ச்சிக்கு நம்நாடு ஈடுகொடுத்து முன்னேற, இந்தசட்டத்தை அமல்படுத்துவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந் சர்மா, முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் பிருத்வி ராஜ் சவாண் ஆகியோர்கூட இந்த மசோதாவுக்கு ஆதரவளித்து சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

ஆனால் காங்கிரஸ் கட்சியில் ஜெய் ராம் ரமேஷ் போன்றவர்கள் இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் என்கிற நோக்கில்மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இப்போதுகூட இந்த மசோதாவில் சிறந்த ஆலோ சனைகளை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது.

ஸ்ரீநகரில் பாகிஸ்தான் தேசியக் கொடியுடன் ஊர்வலம் சென்ற மஸரத் ஆலம்பட் மீது விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டுக்கு களங்கம் விளைவிக்கும் எந்தசெயலையும் மத்திய அரசு அனுமதிக்காது. பாகிஸ்தான் மீதான அனுதாபத்தை இந்த அரசு ஏற்றுக் கொள்ளாது. இந்த நாட்டில் உள்ள அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டவர்களே. நாட்டுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் சட்டம் அனுமதிக்காது.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நாடு திரும்பியது பற்றி கேட்கிறீர்கள். இது காங்கிரஸ் கட்சி சம்பந்தப்பட்ட விஷயம். இது அவர்களது குடும்பப்பிரச்சினை இது குறித்து வேறு எதுவும் கூறுவதற்கில்லை. இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.

Leave a Reply