பருவநிலை மாற்றம் குறித்து தாங்கள் அளித்த வாக்குறுதிகளை வளர்ந்த நாடுகள் நிறைவேற்ற வேண்டும் என மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் வலியுறுத்தியுள்ளார்.

வாஷிங்டனில் 2 நாள்கள் நடைபெறும் "முக்கிய பொருளாதார நாடுகளின் எரி சக்தி, பருவநிலைக்கான அமைப்பின்' கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா வந்துள்ள பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:

வளர்ந்துவரும் நாடுகளுக்கு தர வேண்டிய பசுமைப் பருவநிதியை வழங்குவதன் மூலம், வளர்ச்சியடைந்த நாடுகள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

நியாயமான, சமச் சீரான பருவநிலை ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக இந்தியா, உலக நாடுகளுடன் பேசிவருகிறது.

வளர்ந்த நாடுகள் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக வெளிப்படுத்திய கரிய மில மாசின் ஒட்டுமொத்த பாதிப்புதான் தற்போது பருவநிலை மாற்றத்தில் உண்டா கியுள்ள பிரச்னைக்கு காரணம். எனவே, இந்த பிரச்னையில், வளர்ந்த நாடுகளுக்குள்ள பொறுப்புதான் முக்கியமான ஒன்றாகும்.

வளரும் நாடுகள் இந்த பிரச்னை மீது நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதை வளர்ந்த நாடுகள் புரிந்துகொண்டு அதற்கு மதிப்பளிக்க வேண்டும்.

கடந்த 1997ம் ஆண்டு ஜப்பானின் கியோட்டோவில் செய்துகொள்ளப்பட்ட பருவநிலை ஒப்பந்தம் தற்போது முடிவுக்குவருகிறது. ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்ட அடிப்படையான நோக்கத்திலும், கொள்கையிலும் மாற்றமில்லை.

எனவே, கியோட்டோ ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக இந்த ஆண்டு இறதியில் பாரீஸில் நடைபெற உள்ள பருவநிலை மாநாடு அமையும்.

சுற்றுச் சூழலில் கரியமில மாசை அதிகரித்ததில் வளர்ந்த நாடுகளின் பங்கே அதிகமாக உள்ளது. வளரும் நாடுகளில், பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் காரணத்தால், கரியமில வாயு வெளியேற்றம் குறைந்த அளவிலேயே உள்ளது. எனவே, அதிகப் படியான கரியமில மாசிற்கு வளர்ந்த நாடுகளே அதிகபட்ச பொறுப் பேற்க வேண்டும்.

பருவநிலை மாற்றத்தில் எற்பட்டுள்ள பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு நாடும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நிச்சயமாக ஒருபுதிய மாற்றத்தை உண்டாக்கும். அதேபோல், இதற்காக பல்வேறு நாடுகள் மேற்கொள்ளும் முயற்சியின் காரணமாக, புதிய கண்டு பிடிப்புகளும், தொழில்நுட்பங்களும் அதிகரிக்கும்.

மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 5 ஆண்டுகளுக்குள் புதிப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை மூலம் 1.75 லட்சம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்திசெய்ய இலக்கு நிர்ணயித்துள்ளார்.

இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 350 மில்லியன் டன் கரியமிலவாயு வெளியாவது கட்டுப்படுத்தப்படுகிறது.
இது இந்தியா, உலகிற்கு அளிக்கக் கூடிய மிகப்பெரிய பங்களிப்பாகும். இந்த மின்சார உற்பத்திக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.9 லட்சம் கோடி செலவாகும்.

பருவ நிலை மாற்ற விஷயத்தில், வரும் 2020ம் ஆண்டிற்குள் எட்டவேண்டிய இலக்கை அடைவதற்கு இந்தியா தனது பங்களிப்பாக, உலகிற்கு அளிக்க உள்ள செயல்திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

அதேபோல், 2020ம் ஆண்டிற்கு பிறகு ஆற்றவேண்டிய பணிகள் குறித்து வளர்ந்த நாடுகள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டிய தருணம் இது வாகும் என்று ஜாவடேகர் தெரிவித்தார்.

Leave a Reply