லோக் சபா தேர்தலில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு பாஜக வெற்றிபெற்றது என்று கூறிய ராகுல்காந்தி வாக்களித்த மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் நிலம் கையகப் படுத்தும் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நேற்று காங்கிரஸ் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இதில் ராகுல், சோனியா, மன்மோகன் உள்ளிட்டோர் பேசினர். ராகுல் பேசுகையில் லோக் சபா தேர்தலில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பாஜக பணம் வாங்கிக்கொண்டு வெற்றி பெற்றதாக விமர்சித்தார். இதற்கு மத்திய அமைச்சரும், பாஜ மூத்த தலைவர்களில் ஒருவருமான ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், லோக்சபா தேர்தலில் வாக்களித்த மக்களை ராகுல்காந்தி அவமானப்படுத்தி விட்டார். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் காசு வாங்கிக்கொண்டு பாஜக வெற்றி பெற்றதாக அவர் குற்றம் சாட்டுகிறார். இதற்காக அவர் வாக்களித்த மக்களிடம் மன்னிப்புகேட்க வேண்டும். ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாதவர்கள் தற்போது இவ்வாறு கூறுவதா? ராகுல் காந்தியை எத்தனை முறை காங்கிரஸ் அறிமுகம்செய்தது என்று அவர்களால் கூற முடியுமா? குஜராத் மாடலை ராகுல் விமர்சிக்கிறார். அப்படியானால் வதேராமாடல் தான் வளர்ச்சிக்கு வழிவகுக்குமா என்றும் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். –

Leave a Reply