காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மசரத் ஆலம் மீது மீண்டும் தேசிய பாதுகாப்புசட்டம் பாய்ந்தது, இதனையடுத்து அவர் ஜம்மு சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

கஷ்மீர் பிரிவினைவாதியான மசரத் ஆலம் கடந்த 2010-ம் ஆண்டு மாநில அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன போராட்டங்கள் நடத்தினார். இதில் ஏற்பட்ட வன்முறையில் சுமார் 120 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு சமீபத்தில் பதவியேற்ற மக்கள் ஜனநாயக கட்சி தலைமையிலான அரசு மசரத் ஆலமை கடந்த சில வாரங்களுக்குமுன் பாஜக.,வின் கடும் எதிர்ப்பையும் மீறி விடுவித்தது. இதற்கு கூட்டணி கட்சியான பா.ஜ.க மற்றும் எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இதுதொடர்பாக மத்திய அரசும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான சையத் அலிஷா கிலானியை வரவேற்று கடந்த 15-ந் தேதி பேரணி நடைபெற்றது. மசரத் ஆலம் தலைமையில் நடை பெற்ற இந்த பேரணியில் கலந்துகொண்ட ஏராளமானோர், பாகிஸ்தான் கொடிகளை ஏந்தியவாறு சென்றனர். மேலும் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பிய அவர்கள், பாதுகாப்புபடையினரின் வாகனங்களையும் கல் வீசி தாக்கினர். இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதும் பாகிஸ்தான் கொடியுடன் ஊர்வலம் நடத்திய விவகாரத்தில் காஷ்மீர் பிரிவினைவாதி மசரத் ஆலம் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட மசரத் ஆலம் தற்போது சிறையில் உள்ளார். அவர் மீது மீண்டும் தேசிய பாதுகாப்புசட்டம் பாய்ந்துள்ளது. மசரத் ஆலம் மீது ஜம்முகாஷ்மீர் அதிகாரிகள் தேசியபாதுகாப்பு சட்டத்தை புகுத்தி உள்ளனர். தேசிய பாதுகாப்பு சட்டம் விசாரணை இன்றி குறைந்தது 6 மாதங்களாவது சிறையில்வைக்க வழிவகை செய்கிறது. "மசரத் ஆலம் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் கோட்பால்வால் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்," என்று மாவட்ட மாஜிஸ்திரேட் அல்தாப் அகமது மீர் தெரிவித்து உள்ளார். ஸ்ரீநகரில் இருந்துகொண்டு செல்லப்பட்ட மசரத் ஆலம் ஜம்முவில் உள்ள கோட்பால்வால் சிறையில் அடைக்கப்பட்டார்.

மசரத் ஆலம் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட ஜாமீன் மனுமீது வருகிற சனிக் கிழமை அன்று உத்தரவு பிறப்பிப்பதாக மாவட்ட நீதிமன்றம் நேற்று தெரிவித்தது. மசரத் ஆலம், சையத் அலிஷா கிலானி மற்றும் பிற பிரிவினைவாத தலைவர்களுக்கு எதிராக போலீசார் ரன்பீர் குற்றவியல் நடை முறை சட்டம் பிரிவு 121-ஏ (தேசத்திற்கு எதிராக போர்தொடுத்தல்) பிரிவு 124 (தேசத் துரோகம்) 120-பி (கிரிமினல் சதித்திட்டம்) மற்றும் பிரிவு 147 (கலவரத்தை ஏற்படுத்துதல்) ஆகிய குற்றங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளது. இதுவரையில் மசரத் ஆலம் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Leave a Reply