பஞ்சாயத்துக்களில் சர்பாஞ்ச்பதி கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை ஒட்டி டெல்லியில் நடந்த கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி கூறினார்.

பஞ்சாயத்து உள்ளாட்சி அமைப்புக்கு ஒருபெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அங்கு அவரது கணவரே நிர்வாகத்தில் அதிகாரம் செலுத்துகிறார். அந்தப்பெண் தலைவர் வெறும் பொம்மையாக இருக்கிறார். இத்தகைய சர்பாஞ்ச்-பதி (அதாவது பெண் பஞ்சாயத்து தலைவர் மீது கணவர் ஆதிக்கம் செலுத்தும்) கலாச்சாரம் முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும்.

அடிமட்டளவில் வறுமையை ஒழிக்கவும், கல்வியறிவை பெருக்கவும் பஞ்சாயத்து தலைவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. இத்தகைய சூழலில் பெண்பஞ்சாயத்து தலைவர்கள் மீது அவர்களது கணவர் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்கமுடியாது.

பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் பெண்ணுக்கு சட்டம் அதிகாரங்களை வழங்கியிருக்கிறது. சட்டம் சில உரிமைகளை அவர்களுக்கு வழங்கியிருக்கும் போது அதை பயன்படுத்த அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அந்தவாய்ப்பை தட்டிப்பறிக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது"

கிராமங்களை முன்னேற்றுவது எப்படி என நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும் , "கிராமங்களில்தான் இந்தியா இருக்கிறது என்று மகாத்மா காந்தி கூறினார். எனவே, நமது கிராமங்களை முன்னேற்றுவது பற்றி நாம் அனைவரும் சிந்திக்கவேண்டும். நமது கிராமங்களை கண்டு நாம் பெருமைகொள்ள வேண்டும்.

கிராமங்களில் வசிக்கும் மக்களின் கனவும் பெரிதாக இருக்கிறது. கிராமவாசிகளே, அடுத்த ஐந்தாண்டுகளில் உங்கள் கிராமத்தில் எத்தகைய முன்னேற்றம் ஏற்படவேண்டும் என்பதை சிந்தியுங்கள்.

கிராமங்கள் கல்வியறிவு அதிகரிக்கவேண்டும். பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை கிராமங்களில் அதிகரிப்பது வேதனைக் குரியது. இவ்விவகாரம் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும். கிராமங்களில் அனைவரும் கல்வியறிவு பெறவேண்டும்" இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

Leave a Reply