டெல்லியில் விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக எதிர்ப்பு வலுத்துவருகிறது.

இச்சம்பவம் குறித்து கேஜ்ரிவால் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால், அவரது மன்னிப்பை ஏற்க விவசாயியின் குடும்பத்தினர் மறுத்து விட்டனர். கேஜ்ரிவாலின் விளக்கம் ஏற்கத் தக்கதாக இல்லை என்று பாஜக, காங்கிரஸ் , விவசாய சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக ஆம்ஆத்மி சார்பில் டெல்லியில் கடந்த 22ம் தேதி பேரணி நடைபெற்றது. அப்போது ராஜஸ் தானைச் சேர்ந்த விவசாயி கஜேந்திரசிங் என்பவர் அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்தசம்பவம் நடந்த பிறகும் பேரணி தொடர்ந்து நடந்தது. டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பேரணியின் நிறைவில் பேசினார். இதற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும்கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட விவசாயி கஜேந்திர சிங்கின் தந்தை பானிசிங் கூறும்போது, நான் எனது மகனை இழந்து விட்டேன். கேஜ்ரிவாலின் மன்னிப்பு எனது மகனை மீட்டுத்தருமா?.

கஜேந்திர சிங்கின் சகோதரி ரேகா நிருபர்களிடம் கூறும் போது, கேஜ்ரிவால் இப்போது மன்னிப்பு கேட்பதாலோ அல்லது வருத்தம் தெரிவிப் பதாலோ என்ன நேரப்போகிறது. எனது சகோதரர் இந்தமுடிவை எடுக்கும் அளவுக்கு அவரை தூண்டி இருக்கின்றனர். இதன் பின்னணியில் சதியுள்ளது என்றார்.

மற்றொரு நெருங்கிய உறவினர் கோபால்சிங் கூறும் போது, தற்கொலை சம்பவத்தில் சந்தேகம் உள்ளது. இது பற்றி சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.

முன்னதாக ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேந்திர ரதோர், விவசாயி கஜேந்திர சிங்கின் கிராமமான டவ்சா மாவட்டம், பண்டிகுயிக்கு சென்று அவரது குடும்பத்தாரிடம் பாஜக சார்பில் ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

டெல்லி மாநில பாஜக தலைவர் சதீஷ் உபாத் யாயா நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: சம்பவம் நடந்து 3 நாட்களுக்குப் பிறகு கேஜ்ரிவால் மன்னிப்பு கோரியுள்ளார். இதன் மூலம் அவர் தவறிழைத்திருப்பது உறுதியாகியுள்ளது. விளம்பரத்துக்காக கேஜ்ரிவால் எதையும் செய்வார். அதன் விளைவுதான் இப்போதைய சோகசம்பவம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய்மக்கான் கூறியதாவது: டெல்லியில் முதல் முறையாக ஆட்சி அமைத்து 49 நாட்களில் கேஜ்ரிவால் பதவி விலகினார். அதற்காக அவர் மக்களிடம் மன்னிப்புகோரினார். அதைத்தொடர்ந்து பல்வேறு நேரங்களில் மக்களிடம் அவர் மன்னிப்பு கோரியுள்ளார். இப்போது விவசாயி தற்கொலை சம்பவம் தொடர்பாக மீண்டும் ஒரு முறை பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் எத்தனை முறைதான் மன்னிப்பு கோருவார் என்பது தெரியவில்லை. கேஜ்ரிவால் அளித்துள்ள விளக்கம் ஏற்கத்தக்கதாக இல்லை என்று அஜய்மக்கான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply