ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ இந்தியா உதவும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்..

ஆப்கான் அதிபர் முகமது அஷ்ரப்கனி நேற்று இந்தியா வந்தார். அவரை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியும், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப்கனியும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதில், இருநாட்டு உறவுகள், சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் பேசினார்கள். ஆப்கானிஸ்தானுக்கு 3 ராணுவ சீத்தல் ஹெலி காப்டர்கள் வழங்கவும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார். பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-

பூகோள ரீதியிலும், அரசியல் ரீதியிலும் தடைகள் இருந்தபோதிலும் அதைத்தாண்டி இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு மலர்ந்து முழுமை யடைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவவும், ஸ்திரத் தன்மைக்காகவும் இந்தியா ஆதரவு அளிக்கும். ஆப்கானிஸ்தானில் வன் முறையின் நிழல் இல்லாத அரசியல்சாசன நடவடிக்கைகளை வெற்றிகரமாக எடுக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்மூலம் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமுதாய திட்டங்கள் வலுப்படுத்தப்படும்.

ஆப்கன் பெண்கள் உள்பட சமுதாயத்தின் அனைத்து பகுதியினரின் உரிமைகளையும், எதிர்பார்ப்பு களையும் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். வன்முறைக்கு ஆதரவுதெரிவிப்பதை வெற்றிகரமாக தடுக்க அண்டை நாடுகளின் நேர்மறையான மற்றும் உறுதியான அணுகு முறையும் தேவைப்படுகிறது.

என்று பிரதமர் மோடி கூறினார்.

Leave a Reply