நாட்டில் நீர்ப் பாசனம், குறைந்த விலையில் வீட்டுவசதி, கழிப் பறைகள் அமைத்தல் ஆகியவை தொடர்பான திட்டங்களை விரைவு படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்த உயர் நிலை ஆய்வுக் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கிராமப்புறக் கட்டமைப்பு வசதிகள், மின்சாரம், நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தக்கூட்டத்தில், சுதந்திர இந்தியாவின் 75ஆவது ஆண்டை முன்னிட்டு, அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு, மோடி பாராட்டு தெரிவித்தார்.

நிகழ் நிதி யாண்டில் நிறை வேற்றப்படும் திட்டங்கள் பற்றி, பிரதமர் விரிவாக ஆய்வுநடத்தினார். மேலும், கழிப்பறைகள் கட்டுவது, குறைந்த விலையில் வீட்டு வசதி, நவீன நகரங்கள் தொடர்பான திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, அதுதொடர்பான தகவல்களைத் திரட்டவேண்டும் என்று வலியுறுத்தினார்.

பிரதமரின் நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, கிராமப்புற கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், நகர்ப் புறங்களில், கழிவு நீர் விநியோகம், திடக்கழிவு நிர்வாகம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

அனைத்துக் கிராமங்களுக்கும் விரைவில் மின்சாரவசதி சென்றடைய வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார். அதற்கான வரைவுத் திட்டம், கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், மாற்று எரிசக்தித் துறையில் கவனம் செலுத்தவும், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் மாற்று எரிசக்திக்கு முன்னுரிமை அளிக்கவும் மோடி உத்தரவிட்டார்.

இந்தக்கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, நிதின் கட்கரி, ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், அசோக் கஜபதி ராஜு ஆகியோர் பங்கேற்றனர். மேலும், மத்திய கொள்கைக் குழு, பிரதமர் அலுவலகம் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயதிகாரிகள் கலந்து கொண்டனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply