பாரதிய ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லை என்ற ஒரே காரணத் துக்காக காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு கட்சிகள் எந்த மசோதாவையும் நிறைவேற்றவிடாமல் தொந்தரவு கொடுக்கின்றன.

குறிப்பாக கூறவேண்டுமானால் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற விடாமல் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வருங் காலங்களில் சாலைமேம்பாடு, ரெயில்வே துறை, நீர்பாசன திட்டம், மின்சார திட்டம், ராணுவத்துக்கு தேவையான நிலங்கள் என பார்த்தால் சுமார் 3 சதவீதம்தான் தேவைப்படும். அரசு புறம்போக்கு நிலம், தரிசு நிலங்கள் போக மீதம் 1 சதவீதம் நிலங்கள்தான் தேவைப்படும்.

கடந்த 67 வருடங்களாக மக்களை முன்னேற்ற பாதையில் செல்லவிடாமல் தடுத்த காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் ராஜ்ய சபாவில் 5 வருடம் பா.ஜ.க பெரும்பான்மை இல்லாமல் இருப்பதால் நாட்டை வளர்ச்சிபாதைக்கு கொண்டு செல்ல விடுவதில்லை.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கையகப் படுத்தும் நிலத்தை 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும். இல்லை எனில் அதை அந்த விவசாயிகளுக்கே திருப்பிவழங்க வேண்டும் என்று உள்ளது.

இந்தோ–பங்களாதேஷ் எல்லையில் பார்டர்வேலி அமைக்கும்பணி 90 சதவீதம் முடிவடைந்து உள்ளது. ஆனால் 10 சதவீத பணிகள் பாக்கி உள்ளன. என்ன காரணத்துக்காக பணிகள் பாதிக்கப் பட்டுள்ளன என்றால் நிலம் கையகப்படுத்தும் பிரச்சனைதான். மீதமுள்ள பணிகளை முடிக்க மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் நதி நீர் பிரச்சனை தீர வேண்டும் என்றால் தேசிய நதிகளை இணைக்கவேண்டும் என அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுக்கிறார்கள். தேசியநதிகளை இணைக்க வாய்க்கால் அமைக்க வேண்டும். வாய்க்கால் அமைக்க நிலத்தை கையகப்படுத்த வேண்டும். நிலத்தை கையகப்படுத்தும் மசோதாவுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டு உள்ளதால் 280 திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன.

நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் விவசாயிகளின் விரோதிகள் ஆவர். நாட்டின் தேசதுரோகிகள் ஆவர். நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல விருப்பம் இல்லாதவர்கள் என்பது தெளிவாகிறது.

வருகிற 2022–க்குள் நாடுமுழுவதும் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை பா.ஜ.க அரசு செயல் படுத்தி வருகிறது. இதற்கு ரியல் எஸ்டேட் தொழிலை வரை முறைப்படுத்த வேண்டும்.

தமிழ் நாட்டில் பால் உற்பத்தியில் விவசாயிகள் மிகமோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். விலையில்லா மாடுகளை விவசாயிகளுக்கு வழங்கிவிட்டு அந்த பாலை மொத்தமாக கொள்முதல் செய்யமாட்டேன் என்று கூறுவது என்ன நியாயம்? பால் உற்பத்தி யாளர்களுக்கு நியாயம் கிடைக்க வில்லை என்றால் அவர்களுடன் இணைந்து பா.ஜ.க போராட்டம் நடத்தும்.

கோவையில் மாவோயிஸ்டுகள் கைதுசெய்யப்பட்டு உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்த தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டில் மாவோயிஸ்டுகள் இல்லை என்பதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும். இதற்காக போலீசார் தமிழ்நாடு முழுவதும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா? என்று சோதனை நடத்தவேண்டும். தமிழக அரசு போலீசாருக்கு முழுசுதந்திரம் அளித்து மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு கோவை வந்த பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Leave a Reply