வங்க தேசத்துடனான எல்லை பிரச்னையை தீர்க்க வகைசெய்யும், நில எல்லை வரையறை மசோதா, மக்களவையிலும் வியாழக் கிழமை நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, மசோதாவை நிறைவேற்ற உறுதுணையாக இருந்ததற்காக அனைத்து கட்சி தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

வங்கதேசப் பகுதிகளுக்கு இடையிடையே இருக்கும் இந்தியப்பகுதிகளை அந்நாட்டிடம் கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக இந்தியாவில் இருக்கும் வங்கதேச பகுதிகளை எடுத்துக்கொள்வதற்கு நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறும்வகையில், நில எல்லை வரையறை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேறிய அந்த மசோதா, அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் மக்களவையிலும் வியாழக் கிழமை நிறைவேறியது.

இதையடுத்து, தனது இருக்கையில் இருந்து எழுந்துசென்ற மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே ஆகியோரிடம் நன்றி தெரிவித்தார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய், திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார், மேகாலயா முதல்வர் முகுல் சங்மா, மிúஸாரம் முதல்வர் லால்தன் ஹாவ்லா ஆகியோரைத் தொடர்புகொண்டு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜவாதி தலைவர் முலாயம் சிங், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் உள்ளிட்டோருக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இதனிடையே, "நில எல்லை வரையறை மசோதா நிறைவேறியிருப்பது இந்தியாவின் இராஜதந்திரத்துக்கு கிடைத்துள்ள வெற்றி' என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனாவைத் தொடர்புகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நில வரையறை மசோதா நிறைவேறியதற்காக வங்கதேச மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறினார்.

Leave a Reply