செடிகளுக்கு மனித சிறு நீரை ஊற்றினால் விளைச்சல் அதிகரிக்கிறது என்று மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கூறியது உண்மை என்பது ஆய்வுமூலம் தெரிய வந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தனது டெல்லி பங்களாவில் உள்ள செடிகளுக்கும், மரங்களுக்கும் தன்னுடைய சிறு நீரை ஊற்றுவதால் அவை வேகமாக வளர்வதுடன் கூடுதலான விளைச்சல் அளிப்பதாக கடந்த சிலநாட்களுக்கு முன்பு தெரிவித்து பலரின் கிண்டல் பேச்சுக்கு ஆளானார்.

பெங்களூர் பல்கலைக் கழகத்தின் விவசாய பிரிவு ஆர்கியம் என்ற என்ஜிஓ.,வின் ஆதரவுடன் கடந்த 2008ம் ஆண்டு ஆய்வு ஒன்றை துவங்கியது. அந்தஆய்வில் மனிதனின் சிறுநீர் செடிகளுக்கு ரசாயன உரத்தைவிட சிறப்பான உரமாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து அந்த ஆய்வுக்கு கைடாக இருந்த பேராசிரியர் சி.ஏ.ஸ்ரீனிவாசமூர்த்தி கூறுகையில், ஜிப்சத்துடன் கலந்து மனித சிறு நீரை பயன் படுத்துகையில் விளைச்சல் அதிகரிக்கிறது. இது ரசாயன உரங்களை காட்டிலும் அதிக விளைச்சலை அளிக்கிறது.

தக்காளி, வெண்டைக் காய், கத்தரிக் காய், ராகி, பீன்ஸ், பூசணிக் காய் ஆகியவை மனித சிறுநீரை ஊற்றி வளர்த்தால் அமோகமாக வளர்கிறது. கோமியத்தைவிட மனித சிறுநீரில் அதிகசத்துகள் உள்ளன என்றார். சீனா, நேபாளம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் மனித சிறுநீர் உரமாக பயன் படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மணிபூரில் உருளை மற்றும் பச்சை மிளகாய் விளைச்சலில் மனித சிறுநீர் உரமாக பயன்படுத்தப் படுகிறது. மனித சிறுநீரில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷியம் ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply