நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற பின், நாட்டுமக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு துவக்கப்படு வதற்காக ஜன் தன் யோஜனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் மக்களுக்கிடையே மிகப் பெரிய வரவேற்பை தொடர்ந்து தற்போது அனைத்து மக்களுக்கும் பான்கார்டு வழங்க மத்திய அரசு மெகா திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல்செய்யப்பட்ட போது, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகைக்கான பொருட்களை வாங்குபவர்கள், தங்கள் பான் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டது. இது பொது மக்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியது . ஏனென்றால் நாட்டில் உள்ள பெரும்பாலான கிராம மக்களுக்கு பான்கார்டு என்றால் அது என்னவென்றே தெரியாதவர்கள் பலர் உள்ளனர்.

பின் எப்படி 1 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு பொருட்களை வாங்கும் போது, அவர்கள் பான்கார்டு எண்ணை தரமுடியும். எனவே பொதுமக்களின் அறியாமை மற்றும் கவலையைபோக்க ஆன்லைன் மூலம் 48 மணி நேரத்துக்குள் பான்கார்டு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அதே போல் பான் கார்டு வழங்கும் சிறப்புமுகாம் நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

நாடுமுழுவதும் பல குடும்பங்கள் உள்ள நிலையில், தற்போது 21 கோடி பேர் மட்டுமே பான்கார்டு வைத்துள்ளனர். எனவே நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் பான்கார்டு வைத்திருக்க வில்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. இந்த தகவலை மத்திய மந்திரி ஜெயந்த் சின்காவும் ஒப்புக்கொண்டுள்ளார். எனினும் எளிதில் மக்களுக்கு பான்கார்டு கிடைக்க போதிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் சின்கா தெரிவித்துள்ளார்.

Leave a Reply