தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமார சாமி அறிவித்தார்.

ஜெ., மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என அவர் மீதான தண்டனையை ரத்துசெய்து தீர்ப்பளித்தார். ஜெ., சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேரையும் விடுதலைசெய்வதாக நீதிபதி அறிவித்தார்.

1991-96 ல் முதல்வராக இருந்த ஜெ., 66. 5 கோடி சொத்துசேர்த்ததாக ஜெ., மற்றும் இவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்குபேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்கு பதியப் பட்டது. உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்கா விசாரித்தார். வழக்கில் ஜெ.,வுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி அபராதமும் விதித்தார். மேலும் கூட்டுச்சதியில் ஈடுபட்ட சசிகலா, இளவரசி , சுதாகரனுக்கும் தலா 4 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஜெ., முதல்வர் பதவியை இழந்தார். தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட ஜெ., வுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஜாமின் பெற்ற நாள் முதல் ஜெ., வீ்ட்டுக்குள்ளேயே இருந்து வருகிறார். அரசு மற்றும் கட்சி சார்பில் நடக்கும் எந்தவொரு நிகழ்ச்சியலும் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அப்பீல் வழக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை முடிக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று நீதிபதி

குமாரசாமி தீர்ப்பளித்தார். 900 பக்கங்கள்கொண்ட தீர்ப்பை நீதிபதி அறையில் வாசித்தார்.

காலை 11 மணிக்கு நீதிமன்றம் வந்து தனது இருக்கையில் அமர்ந்த நீதிபதி மேல்முறையீட்டு வழக்கின் வரிசை எண்களை வாசித்து விட்டு, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல்செய்த மேல்முறையீட்டு மனுக்களை ஏற்பதாக முதலில்கூறினார். பின்னர் 4 பேரும் மேல்முறையீட்டு மனுவில் முன்வைத்த கோரிக்கையான கீழ்நீதிமன்ற தீர்ப்பை ரத்துசெய்ய வேண்டும்; அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பதாகவும் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார். அதிகபட்சம் 3 நிமிடங்களிலேயே தமது தீர்ப்பை வாசித்து முடித்தார்

மேலும் சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் அவரிடமே மீண்டும் ஒப்படைக்க நீதிபதி குமார சாமி உத்தரவிட்டுள்ளார். மூன்று நிமிடத்தில் இந்ததீர்ப்பு கூறப்பட்டாலும் 919 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பின் நகல் தற்போது வெளியிடப் பட்டுள்ளது. அதன் விவரம்

வருமானத்தை விட 10 சதவீதம் சொத்து சேர்த்திருந்தால் விடுவிக்கப்படலாம். ஆனால் ஜெயலலிதா வருமானத்தைவிட 8.12 சதவவீதம் குறைவாகதான் சொத்து சேர்த்துள்ளார். இது அனுமதிக்கப்பட்ட அளவுதான் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதா வங்கிகடன்களை கீழ் நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இன்று (11.5.2015) கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது. என் மீது சுமத்தப்பட்ட அவதூறை நீக்கிய தீர்ப்பு இது. என் மீது எனது அரசியல் எதிரிகளால் சுமத்தப்பட்ட பழியினைத் துடைத்திட்ட தீர்ப்பு இது. நான் எந்த தவறும் செய்யாதவர் என்பதை உறுதி செய்த தீர்ப்பு இது. புடம் போட்ட தங்கமாக நான் மீள இந்தத் தீர்ப்பு வழிவகை செய்துள்ளது.

கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பிற்குப் பிறகு என் மீது மாறாப் பற்றும், அன்பும் கொண்ட தமிழக மக்கள் இறைவனிடம் வேண்டியதற்கு, இறைவன் அளித்த வரம் இது. இந்த தீர்ப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த வெற்றி என்று நான் கருதவில்லை. நீதி நிலை நாட்டப்பட்டு, தர்மம் வென்றது என்பது தான் இந்த தீர்ப்பு. சூழ்ச்சிகள் என்றைக்குமே தற்காலிகமாக வெற்றி பெறலாம். ஆனால், இறுதி வெற்றி என்பது தர்மத்திற்கும், நேர்மைக்கும் தான் கிடைக்கும். திமுகவினாரால் சூழ்ச்சி வலைப் பின்னப்பட்டு, அதன் காரணமாக என் மீது போடப்பட்ட வழக்கில், சதியும் விதியும் சதிராடியதால் இடையிலே நீதி உறங்கி விட்டது. இன்றைய தீர்ப்பு நீதியே என்றும் வெல்லும் என்பதை பறைசாற்றுகிறது. என்னையும், அஇஅதிமுகவையும் நேரடியாக வெல்ல முடியாது என்ற காரணத்தால் அரசியல் எதிரிகள் இறுதி வரை தங்கள் சூழ்ச்சிகளால் என்னையும், புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல், இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்ட மாபெரும் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தையும் அழித்து விடலாம் என்ற காழ்ப்புணர்வை இன்றுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். நான் குற்றமற்றவர் என்பதில் எள் முனையளவும் நம்பிக்கை குலையாமல் எனக்காக பிரார்த்தனைகள் மேற்கொண்ட என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களுக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான கழக உடன்பிறப்புகளுக்கும், அனைத்து தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் தனது அறிக்கையில்

கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக மன வேதனை அடைந்த 233 கழக உடன்பிறப்புகள் எனக்காக தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள் என்பது என்றென்றும் எனக்கு வேதனை அளிக்கக்கூடியதாகும். நேற்று (10.5.2015) கூட நான்கு கழக உடன்பிறப்புகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள். இன்னும் சற்று நிதானத்தைக் கடைபிடித்திருந்தால் அவர்களும் தமிழக மக்களின் இந்த மகிழ்ச்சியை இன்று கொண்டாடி இருக்கலாம். தமிழக மக்கள் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதே எப்போதும் எனது அவா ஆகும். தமிழக மக்களின் நலனே என் நலன் என்று நான் என்றென்றும் தமிழக மக்களுக்காகவே உழைத்திடுவேன் என தெரிவித்துள்ளார்.

http://karnatakajudiciary.kar.nic.in/noticeBoard/CRL-A-835-838-2014.pdf

Leave a Reply