சொத்துக்குவிப்பு வழக்கில், அரசியல் கட்சிகள் எதிர்பார்ப்புக்கு மாறாக தீர்ப்புவந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு வந்திருக்கிறது. எது எப்படி இருந்தாலும் இந்த தீர்ப்பில் வெற்றி பெற்றதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இத்தனை ஆண்டுகள் நடந்த வழக்கு, இத்தனை சாட்சிகள் இதற்கு முன்னால் வந்த தீர்ப்பின்படி கடுமையான தண்டனை, பின்பு ஜாமீன், பின்பு விடுதலை. இவையெல்லாம் நடந்து வருகிறது. இவை ஒவ்வொன்றும் ஆழமாக சிந்திக்க வைக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று ஆச்சார்யா சொல்லியிருக்கிறார். நமக்குள்ள கவலை எல்லாம் குற்றம் செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கக் கூடாது. செய்யாதவர்கள் தண்டனை அடைந்து விடக் கூடாது என்பதே முறையான நீதியின் தன்மையாக இருக்க வேண்டும்.

நடந்தது ஊழல் வழக்கு, வழக்கமாக தமிழகத்தில் ஊழலும் நடந்து வருகிறது என்பதற்கு ஒவ்வொரு துறையிலும் இன்று வெளியாகும் தகவல்கள் நமக்கு உணர்த்துகிறது. இந்தத் தவறுகள் எங்கே நடக்கிறது, ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து தவறுகள் களையப்பட்டு ஊழல் வழக்கில் தலை குனிந்த தமிழகம் இனிமேலாவது ஊழல் ஒழிப்பில் முதன்மை பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.

வழக்குகள் தொடர்ந்து கொண்டிருக்கட்டும். ஆனால் வழக்கமாக தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய தேவைகளும், சேவைகளும் கிடைக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. இந்தத் தீர்ப்பில் மட்டுமல்ல எந்தத் தீர்ப்பிலும் பாரதிய ஜனதா கட்சியின் தலையீடு இல்லை என்பதை மக்;களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

என்னைப் போறுத்த வரையில் மக்கள் முதல்வர் இதற்கு முன்னால் எப்படி இருந்தாரோ இறைவனின் அருளால் நீதி மன்றம் ஓர் மிகப் பெரிய நிம்மதியை அவர்களுக்கு அளித்திருக்கிறது. அந்த நிம்மதி தமிழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை ஜெயலலிதா அவர்கள்; உறுதி செய்ய வேண்டும் என்பது மக்கள் நலன் கருதி எனது கோரிக்கையாக இருக்கிறது.
இப்படிக்கு

என்றும் மக்கள் பணியில்

(டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்)

Leave a Reply