காபூல் நகரில் உள்ள விருந்தினர் மாளிகையில், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 இந்தியர்கள் உள்ப்பட 7 பேர் உயிரிழந்தனர்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல்நகரில் உள்ள பார்க்பிளேஸ் விருந்தினர் மாளிகையில், நேற்று இரவு ஆப்கானிஸ்தானை சேர்ந்த பாடகர் அல்தாப் ஹுசையின், விஐபி.களுக்கு விருந்து அளித்துள்ளார். இதில் இந்தியா உள்பட பல்வேறு நாட்டு அதிகாரிகள் கலந்துகொண்டனர் . அப்போது விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 2 இந்தியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் என 7 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாளிகைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்களை குறிவைத்து துப்பாக்கிசூடு நடத்தி உள்ளனர்.

துப்பாக்கி சூடு நடந்த போது அங்கு 6 இந்தியர்கள் இருந்தனர். மூன்றுபேர் எப்படியோ வெளியே தப்பி ஓடிவந்துவிட்டனர். ஒரு வரை காணவில்லை. மாளிகையை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் வளைத்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்றும் உள்ளே இருந்த 56 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்றும் பிபிசி. செய்தி வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தில் மேலும் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் இந்திய தூதரகத்தை குறி வைத்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இச்சம்பவத்திற்கு கவலையை தெரிவித்துள்ளார். "நான் விமானத்தில் பயணம் செய்த போது, காபூல் நகரில் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக செய்திவந்தது. காபூல் நகரில் தற்போது நிலவும் சூழ்நிலையில் நான்மிகவும் கவலை அடைந்து உள்ளேன். அனைவருடைய பாதுகாப்புக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்," என்று பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply