கேள்வி: மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் தமிழகத்தில் தாமதப்படுத்தப்படுவதாக கூறுகிறார்களே?

பொன்னார் : இந்தியா முழுவதும் முன்னேற வேண்டும் என பாஜக நினைத்து அதற்கான பணிகளில் இறங்கி உள்ளது. பிரதமரும் இந்தியா முன்னேற வேண்டும் என்று முழு வேகத்தில் செயல்பட்டு வருகிறார். நான் தமிழன் என்பதால் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முதன்மை மாநிலமாக மாற வேண்டும் என எண்ணுகிறேன். திட்டங்கள் காலம் நீடிப்பதால் இழப்புக்கள் தான் அதிகம் ஏற்படும்.

கேள்வி : தமிழகத்தில் அனைத்து துறையும் ஸ்தம்பித்து உள்ளதாக கூறுகிறார்களே?

பொன்னார் : முதல்வர் பொறுப்புக்கு அவர் வந்து சில மாதங்களே ஆகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். தமிழகத்தில் நல்லது நடக்க வேண்டும்.

கேள்வி: தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாக கூறுகிறார்களே?

பொன்னார் : தமிழ்நாட்டில் தேர்தல் விரைவில் வர இருக்கிறது. 2016-ல் மக்கள் நல்ல முடிவை எடுப்பார்கள்.

கேள்வி: அ.தி.மு.க, பொது செயலாளர் விடுதலை ஆகி உள்ளாரே?

பொன்னார் : ஊழலற்ற, நேர்மையான, திறமையான ஆட்சி தமிழகத்தில் வரவேண்டும். அதற்கு ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்க வேண்டும். தற்போது துணிச்சல் மிக்க முதல்வர் தேவை.

கேள்வி: வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பாஜக கூட்டணி ஏற்படுமா?

பொன்னார் : அப்படி இல்லை. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதுவரை நேர்மையான, திறமையான நல்ல முதல்வர் தேவை, இதை வைத்து அப்படி கூறுகிறேன்.

கேள்வி: நீங்கள் பேசும் போது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அம்மா என்று கூறினீர்கள் அப்படி ஏன் கூறினீர்கள்?

பொன்னார் : கலைஞரை கலைஞர் என்றும், வை.கோபால்சாமியை வைகோ என்றும், பாமக நிறுவனரை டாக்டர் ஐயா என்றும் தான் அழைத்து வருகிறேன். இதுபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளரை அம்மா என்று தான் கூறுகிறேன். அதில் எந்த தவறும் இல்லை.

கேள்வி: பாஜகவில் தற்போது உள்ள கூட்டணி தொடருமா?

பொன்னார் : தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளவர்கள் வெளியில் போகக்கூடாது என விரும்புகிறோம். எங்கள் கூட்டணியில் இன்னும் சிலர் சேருவார்கள். தி.மு.க., அ.தி.மு.க.விற்கு பதிலாக பாஜக ஆட்சிக்கு வரும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று போகிற போக்கில் நம்பிக்கையாக சொன்னார் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

Tags:

Leave a Reply