இந்த ஒரு ஆண்டில், பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, ஊழல் இல்லா ஆட்சியை நடத்தியுள்ளதாக, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஒரு ஆண்டில், மத்திய அரசு செய்துள்ள சாதனைகளையும், பட்டியலிட்டார்.

மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு பதவியேற்று, ஒரு ஆண்டு நிறைவடைய உள்ளது. இதை பிரம்மாண்ட விழாவாககொண்டாட, மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இந்த ஒரு ஆண்டில், ஒவ்வொரு அமைச்சகங்கள் சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்த அறிக்கைகள், பிரதமர் மோடியிடம் அளிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சரும், பாஜக., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களுக்கு முன் ஆட்சியில் இருந்த, மன்மோகன்சிங் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசு, ஊழல் அரசாக விளங்கியது; அனைத்து துறைகளிலும் ஊழல்செய்தது; தற்போது, அந்த நிலையை மாற்றியுள்ளோம். கடந்த ஒரு ஆண்டில், பிரதமர் மோடி தலைமையிலான அரசில், ஒரு ஊழல்கூட நடக்கவில்லை; இது, எங்களின் முக்கியமான சாதனை.இதன் மூலம், அரசியல் ரீதியான லஞ்சம் மற்றும் ஊழல்களில் இருந்து, சாதாரண மனிதர்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது.

நாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும், சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சியை, இரட்டை இலக்கத்துக்கு கொண்டு செல்வதுதான், எங்கள் நோக்கம்; ஆனால், இந்த நடவடிக்கைகளுக்கு, காங்., முட்டுக்கட்டை போடுகிறது; முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு இடையூறுசெய்கிறது. நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றாமல் ஓய மாட்டோம்.

கட்டமைப்பு வசதிகளுக்கும், கிராமப்புற மேம்பாட்டு திட்டங்களுக்கும், அதிகமானநிதி ஒதுக்கப்படும். மோடி தலைமையிலான மத்திய அரசு, சமூகதிட்டங்களை செயல்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது. இதற்கு முன், வேறு எந்த அரசும் செய்யாதளவுக்கு, இந்த துறையில் நாங்கள் சாதனை செய்துள்ளோம்.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படையான அணுகுமுறையை ஏற்படுத்தி உள்ளோம். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு போன்ற நடைமுறைகளில், முந்தைய அரசில் ஊழல் நடந்தது. தற்போது, இந்த இயற்கை வளங்களில் இருந்து, அரசுக்கு வருவாய்வரும் வகையில், கொள்கையை மாற்றியுள்ளோம். முக்கிய முடிவுகள் உடனுக்குடன் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில், காலதாமதத்துக்கு வேலையில்லை. வரிவிதிப்பு முறை என்பது, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இருக்கவேண்டும்; எளிமையாகவும் இருக்கவேண்டும். தே.ஜ., கூட்டணி ஆட்சியில், இதைதான் நாங்கள் செய்துவருகிறோம். சரக்கு மற்றும் சேவைவரியில், வரலாற்று சிறப்புவாய்ந்த மாற்றங்களை செய்துள்ளோம். பெரும்பாலான மாநில அரசுகள், இதற்கு ஒத்துழைப்பதாக அறிவித்துள்ளன. இதன்படி, அடுத்தாண்டு ஏப்., 1ம் தேதியிலிருந்து, புதியவரிவிதிப்பு நடைமுறை அமலுக்கு வரும்.

'சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு, அ.தி.மு.க.,வின் ஆதரவு, எந்தளவில் இருக்கும்' என, அமைச்சர் அருண் ஜெட்லியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர் அளித்த பதில்: இந்த விவகாரம் குறித்து, நானே நேரடியாக, ஜெயலலிதாவிடம் பேசியுள்ளேன்; மற்ற கட்சிகளுடனும் பேசியுள்ளேன். மற்றகட்சிகளை ஒப்பிடும் போது, அ.தி.மு.க.,வுக்கு மட்டும்தான், இம்மசோதாவின் மீது தயக்கங்கள் உள்ளது. தமிழக எம்.பி.,க்கள் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் பலரும், என்னை சந்தித்தனர். அப்போது, 'எந்த சூழ்நிலையிலும், அச்சம் கொள்ள தேவையில்லை; இந்தசட்டம் அமல்படுத்தப் பட்டால், தமிழகத்துக்கு, ஒரு பைசாகூட, இழப்பு ஏற்படாது' என, வாக்குறுதி அளித்தேன். மத்திய நிதியமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்விலும்கூட, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் வாயிலாக, தமிழகத்துக்கு நன்மையும், பலபலன்களும் கிடைக்கும் என, தெரியவந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

தே.ஜ., கூட்டணி அரசு, எட்டு முக்கிய சாதனைகளை செய்துள்ளதாக, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

* கடந்த ஒரு ஆண்டில், 18 நாடுகளுக்கு, பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்துள்ளார். அரசின் வெளியுறவுக் கொள்கைகளால், வெளிநாடுகளின் தலைவர்களுக்கு, நம் நாட்டின் மீது மரியாதை ஏற்பட்டுள்ளது.

* நிலக்கரி சுரங்கம், தொலைத்தொடர்பு, மின்சக்தி துறைகளில் ஏலம் நடத்தி வெளிப்படையான நிர்வாகத்தை அளித்தது. தனி நபர் சார்ந்த முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், கொள்கை அடிப்படையில் விரைவான முடிவுகள் நிர்வாகத்தில் எடுத்தல்.

* அதிகமான வரி விதிப்பு நடைமுறை, முதலீட்டாளர்களுக்கும், பொருளாதாரத்துக்கும் ஏற்றதல்ல; இதனால், வரிவிதிப்பு முறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை ஏற்படுத்தி உள்ளோம்.

* அரசு நடவடிக்கைகள் முற்றிலும் வெளிப்படையாக அமைந்து, சாதாரண மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கி, மாநிலங்களுக்கு அதிக நிதி உரிமை அளித்தது. நிதிப்பற்றாக்குறை, நடப்பு கணக்குப் பற்றாக் குறையை கட்டுக்குள் வைத்தது.

* வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பதில், அரசு தீவிரமாக செயல்படுகிறது; கருப்பு பணத்தை மீட்கும் முயற்சியாக சிறப்பு புலனாய்வு பிரிவை உண்டாக்கியது. அதன் மூலம், உலக நாடுகளில் இருந்து தகவல்களை சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தியது. இதற்காக, சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

* கிராமப்புற மற்றும் நகர்ப்புற கட்டமைப்புகளை மேம்படுத்துவதில், அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது; இதன் மூலம், கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 16 திட்டங்கள் மீண்டும் துவங்கப்பட்டு உள்ளன.

* சர்வதேச அளவில் நிலவிய பொருளாதார மந்த நிலையால், வங்கித் துறை கடும் நெருக்கடியில் சிக்கி தவித்தது; இந்த நெருக்கடியான சூழ்நிலையை மாற்றியுள்ளோம்.

* நம் நாட்டில் உள்ள பெரும்பாலானோருக்கு, ஓய்வூதியம் கிடைப்பது இல்லை; இதை சரி செய்யும் வகையில், புதிய சேமிப்பு திட்டங்கள் துவங்கப்பட்டு உள்ளன. 'முத்ரா' வங்கி மூலம், 5.7 கோடி சிறு, குறு தொழில்முனைவோர்களுக்கு உதவும் விதமாக முத்ரா வங்கியை அமைத்து, 10 லட்சம் வரை கடனுதவி அளித்தல். சேமிப்பையும் அதிகப்படுத்துதல்.

Leave a Reply