முகலாய பேரரசர் அக்பரை புகழ்வதுபோல், அவரை கடுமையாக எதிர்த்த ராஜபுத்ர வீரர் மகா ராணா பிரதாப் சிங்கை, யாரும் புகழ்வதில்லை' என, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில், பிரதாப்சிங் ராணாவின் சிலையை திறந்து வைத்த போது, ராஜ்நாத்சிங் இவ்வாறு பேசியது, சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதமாகியுள்ளது.ராஜ்நாத்சிங்கின் வருத்தத்தை போக்கும் வகையில், அரியானாவை ஆளும் பா.ஜ., அரசு, பிரதாப்சிங் நினைவை போற்றும் வகையில், அரசு சார்பில் விளம்பரம் வெளியிட்டது.

மாவீரர் மகா ராணா குறித்து, வரலாற்று ஆசிரியர்கள் பலகருத்துகளை தெரிவித்துள்ளனர். 'மேவார் அரசுகளின் வரலாற்றை கூறும், 'வீர் வினோத்' என்றநுால், ராணா பிரதாப் சிங்கை, சிறந்த வீரராக போற்றுகிறது. ஆனால், பரந்த சாம்ராஜ்யத்தை கொண்ட அக்பருக்கு இணையான அளவிற்கு அந்தபாராட்டு இல்லை' என, சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

ஆஷிர்பதி லால் ஸ்ரீவத்சவா என்ற வரலாற்று ஆய்வாளர்தான், 1940ம் ஆண்டுகளில், முதன்முதலாக, அக்பர் – ராணா சர்ச்சைக்கு வித்திட்டவர். அக்பரின் சுய சரிதையை எழுதிய இவர், அதில், 'ராணா, மாவீரர் அல்ல' என, அவரது எதிரிகள்கூட கூற மாட்டார்கள்; ஆனால், அக்பருடன் ஒப்பிடும்போது அவரின் வீரம் சற்று குறைவு தான்' என, தெரிவித்துள்ளார்.

ராணாவின் வீரம் பரவலான பாராட்டை பெறாமல் போனதற்கு, ராஜ புத்திரர்களின் ஒற்றுமையின்மையும் ஒருகாரணம்.உதாரணமாக, ஜெய்ப்பூர் அரசரான மான்சிங் உதவியால்தான், அக்பரின் ராணுவம், சிந்து சமவெளியை கடக்கமுடிந்தது.

'முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில்கூட, அக்பர் – ராணா விவகாரம் சூடுபிடித்தது' என, நினைவு கூர்கிறார் வரலாற்று ஆசிரியர் இர்பான்ஹபீப்.இந்திய வரலாற்று ஆய்வுகுழு உறுப்பினரான சார்திந்து முகர்ஜி கூறுகையில், ''இடது சாரி சிந்தனையாளர்கள், வரலாற்றை திரித்துக்கூறி, இந்து மதத்தை சேர்ந்த மாவீரர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கத்தவறினர்; அதனால்தான், ராணா போன்ற வீரர்களின் புகழ், ஓரளவுடன் நின்றுவிட்டது,'' என, தெரிவித்துள்ளார்.

Leave a Reply