பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்க்கை தமிழகத்தில் எந்த நிலையில் உள்ளது?. எவ்வளவு பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்?.

பதில்:- தமிழகத்தில் இதுவரை 40 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கும் பணி நடந்து வருகிறது.

கேள்வி:- மத்தியில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்று, வரும் 26-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. அதை தமிழக பா.ஜ.க. எந்த வகையில் கொண்டாட உள்ளது?.

பதில்:- தமிழகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாட உள்ளோம். 100 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. முதல் கூட்டம் சென்னையிலோ, அதன் சுற்றுவட்டார பகுதியிலோ வரும் 28-ந் தேதி நடைபெற உள்ளது. இதில், மத்திய மந்திரி ஒருவர் பங்கேற்று பேசுகிறார். தமிழகத்தில் தென் பகுதியில் நடைபெறும் கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் முரளிதரராவ், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

முன்னதாக, வரும் 26-ந் தேதி சென்னை கமலாலயத்தில், பா.ஜ.க. அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் கண்காட்சி நடைபெற இருக்கிறது. மறுநாள் (27-ந் தேதி) பிரதமர் நரேந்திரமோடியின் 'தூய்மை இந்தியா' திட்டம் குறித்த பிரசார வாகனமும் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. மேலும், பா.ஜ.க. அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி 60 லட்சம் புத்தகங்கள் அச்சடித்து தமிழகம் முழுவதும் விநியோகிக்க உள்ளோம்.

கேள்வி:- காங்கிரஸ் கட்சியும், அ.தி.மு.க.வும் நெருங்கி வருவதாக கூறப்படுகிறதே?.

பதில்:- இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தான் பதில் அளிக்க வேண்டும். ஜெயலலிதா வழக்கில் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு கர்நாடக அரசுக்குக்கு (காங்கிரஸ் அரசு) உள்ளது. எனவே, அவரிடம் இருந்து இதற்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

கேள்வி:- தமிழக மக்களை மத்திய மந்திரிகள் சந்திக்கும் நிகழ்ச்சி 2 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளதே?. மீண்டும் எப்போது நடக்கும்?.

பதில்:- தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, பா.ஜ.க. ஆட்சியின் ஒரு ஆண்டு கொண்டாட்டம், பாராளுமன்றம் கூடுதலாக 3 நாட்கள் நடந்தது போன்ற சூழ்நிலைகளால் தான், தமிழகத்திற்கு மத்திய மந்திரிகள் வரவில்லை. விரைவில் அவர்கள் வருவார்கள். தமிழக மக்கள் பிரச்சினை கவனிக்கப்படும். தமிழக மக்கள் மீது மத்திய அரசு தனி கவனம் செலுத்தும்.

கேள்வி:- தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை பா.ஜ.க. எந்த வகையில் எதிர்கொள்ளும்?.

பதில்:- இப்போது கட்சியில் அடிப்படை உறுப்பினர்களை சேர்ப்பதில்தான் கவனத்தை செலுத்தி வருகிறோம். சட்டமன்ற தொகுதி வாரியாக மாநாடு நடத்த உள்ளோம். தமிழகத்தில் பா.ஜ.க. வளர்வதற்கான நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளர் நிறுத்தப்படுவார். தமிழகத்தில் மாற்று சக்தியாக உருவெடுத்து பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Leave a Reply