எய்ம்ஸ் மருத்துவமனை, ரூ.15 கோடியில் முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனை என நரேந்திரமோடி அரசால் தமிழகத்துக்கு கிடைத்த நன்மைகள் ஏராளம் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்

பிரதமர் நரேந்திர மோடி அரசின் ஓராண்டு நிறைவுவிழா கொண்டாட்டம், சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் எஸ்.மோகன்ராஜுலு, இணை அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசுவெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண் டாடினார். மோடி அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் புகைப்பட கண் காட்சியை கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தொடங்கி வைத்தார்.

பின்னர் நிருபர்களிடம் தமிழிசை கூறியதாவது:

கடந்த 8மாத அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் முடங்கியிருந்தது. மாநில அரசின் திட்டங்கள் மட்டுமல்ல, அதன்மூலம் செயல்படுத்தப்பட வேண்டிய மத்திய அரசின் திட்டங்களும் முடங்கியிருந்தன.

பொதுப் பணித்துறை ஒப்பந்த தாரர்கள் கூறிய ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு பதிலாக, புகார் கூறிய ஒப்பந்த தாரர்கள்மீதே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. 8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஜெயலலிதா முதல்வராகியுள்ளார். கடைசி ஓராண்டிலாவது ஊழலற்ற, வெளிப் படையான, விரைந்துசெயல்படும் நல்லாட்சியை அவர் வழங்கவேண்டும்.

தமிழகத்தில் பாஜக மிகப் பெரிய கட்சியாக வளர்ந்துவருகிறது. வரும் 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய சக்தியாக விளங்கும். திமுக தலைவர் கருணாநிதியை பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தது அரசியல்நாகரிகத்தின் அடையாளம்.

முத்ரா வங்கி, அனைவருக்கும் வங்கி கணக்கு, தூய்மை இந்தியா, ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு, மேக்இன் இந்தியா என பாஜக அரசின் ஓராண்டு சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். எய்ம்ஸ் மருத்துவமனை, ரூ.15 கோடியில் முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனை, நவீனநகரங்கள், இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்ஸ் ஆகியோரைமீட்டது என தமிழகத்துக்கு மோடி அரசால் கிடைத்த நன்மைகள் ஏராளம்.

மோடி வெளிநாடுகளுக்கு செல்வதை எதிர்க்கட்சிகள் கேலிசெய்கின்றன. பிரதமரின் பயணத்தால் வெளிநாட்டு முதலீடுகள் குவிந்துள்ளன. பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது. மோடி வெளிநாடுகளுக்கு செல்வதை தொலை காட்சிகளில் மக்கள் பார்க்கின்றனர். ஆனால், 56 நாட்கள் எங்கு சென்றார் என்பதே தெரியாமல் காணாமல் போன ராகுல் காந்திக்கு, மோடி அரசை குறைகூற எந்த தார்மீக உரிமையும் இல்லை.என்று தமிழிசை கூறினார்.

Leave a Reply