நரேந்திர மோடி தலைமையிலான பாஜக. அரசாங்கம் ஊழலை நாட்டில் இருந்தே விரட்டியடிக்கும் என்று பா.ஜ.கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, 'தினத் தந்தி'க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியுள்ளார்.

பாஜக. அரசாங்கத்தின் முதல் ஆண்டு நிறைவையொட்டி, பா.ஜ.கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, 'தினத்தந்தி'க்கு சிறப்புபேட்டி அளித்தார். 'தினத் தந்தி' தலைமை செய்தியாளர் டி.இ.ஆர்.சுகுமார் கேட்ட கேள்விகளும், அதற்கு அமித் ஷா அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– பா.ஜ.க. அரசாங்கம் தன் முதல் ஆண்டு நிறைவு செய்யும் இந்த நாளில் தமிழ் நாளிதழ்களில் அதிக விற்பனையாகும் 'தினத்தந்தி' நாளிதழின் சார்பில் எங்களது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். பா.ஜ.க. தேசிய தலைவர் என்ற முறையில் இந்த ஒரு ஆண்டு ஆட்சி பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்:– பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் இந்த ஒரு ஆண்டில் ஊழலை மத்திய அரசாங்கத்தின் உயர்ந்த இடங்களில் இருந்து பட்டவர்த்தனமாக ஒழித்துவிட்ட செய்தி மெதுவாக மாநிலங்களிலும் ஊடுருவிக்கொண்டு இருக்கிறது. இந்த குறுகிய காலத்தில் மோடி அரசாங்கம் விலைவாசி உயர்வையும், நிதிப்பற்றாக்குறையையும், நடப்பு கணக்கு பற்றாக்குறையையும் கட்டுப்படுத்திவிட்டது. பெட்ரோல், டீசல் விலைகள் பலமுறை குறைக்கப்பட்டுள்ளது. மற்ற பண்டங்களின் விலை நிலையாக உள்ளது. மொத்தவிலை பணவீக்கம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 6.18 சதவீதமாக இருந்தது, சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு இந்த அரசாங்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் –2.65 சதவீதமாக குறைந்துள்ளது.

அபரிமிதமான அளவில் ஒட்டுமொத்த பொருளாதாரம் வளர்ச்சிகண்டு, வளர்ச்சி விகிதத்தில் சீனாவைவிட முந்திவிட்டது. கறுப்பு பணத்தை ஒழிக்க புதிய சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது. நீண்டகாலமாக நிலுவையில் இருந்த சீர்திருத்தங்கள், முடிவு எடுக்கும் நடைமுறைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் 14–வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட 32 சதவீத ஒதுக்கீட்டை 42 சதவீதமாக உயர்த்துவது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு சமுதாய பாதுகாப்பு அளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்கு அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி:– இந்த ஒரு ஆண்டில் உங்கள் ஆட்சியில் மிகப்பெரிய வெற்றி எது? இதைத் தொடர்ந்து உங்கள் ஆட்சியின் மற்ற சாதனைகளை பட்டியலிட முடியுமா?

பதில்:– மோடி அரசாங்கம் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ளது. அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டம், அடல் பென்ஷன் திட்டம், பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜனா திட்டம், பிரதம மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் போன்றவைகள் தொடங்கப் பட்டுள்ளன. அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டம் மூலம் நாடுமுழுவதும் 15 கோடியே 58 லட்சம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் 59 லட்சத்து 77 ஆயிரம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பிரதமரின் இறப்பு மற்றும் உடல் ஊன காப்பீட்டு திட்டத்தின் அடிப்படையில் ஆண்டு பிரிமியம் ரூ.12 செலுத்துவதன் மூலம் 2 லட்ச ரூபாய்க்கான காப்பீடு வழங்கப்படும். ஜீவன் ஜோதி பீம யோஜனா திட்டத்தின் அடிப்படையில் 18 முதல் 50 வயதுள்ள அனைத்து வங்கி கணக்குதாரர்களுக்கும் ஆண்டு பிரிமியம் 330 ரூபாய் செலுத்துவதன் மூலம் 2 லட்ச ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு வழங்கப்படும். அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் மாதந்தோறும் குறிப்பிட்ட பிரிமியம் கட்டுபவர்களுக்கு 60 வயது முதல் மாதம் ஆயிரம் ரூபாய், 2 ஆயிரம் ரூபாய், 3 ஆயிரம் ரூபாய், 4 ஆயிரம் ரூபாய், 5 ஆயிரம் ரூபாய் என பென்ஷன் வழங்கப்படும். முத்ரா வங்கி முதல் தலைமுறை தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, தூய்மை இந்தியா,

இந்தியாவில் தயாரிப்பு திட்டங்களும் மற்றும் இந்த நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்க திறன் இந்தியா திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வெற்றிகரமான திட்டங்களின் பட்டியல் மிக நீளமானது. இவையெல்லாம் அதில் சில எடுத்துக்காட்டுகள்தான்.

கேள்வி:– பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க.வின் பெரிய தலைவர்கள் வருமானவரியை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பரிமாற்ற வரித்திட்டத்தை கொண்டுவருவோம் என்று உறுதி அளித்த நிலையில் அதை பா.ஜ.க. அரசாங்கத்திடம் எதிர்பார்த்த வருமானவரி கட்டும் வரம்பில் உள்ள நடுத்தர மக்கள் அது நிறைவேறவில்லையே என்ற உணர்வில் இருக்கிறார்களே! இதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில்:– இந்த பிரிவு அந்த பிரிவு என்று பார்க்காமல் மோடி அரசாங்கம் சமுதாயத்தில் உள்ள அனைத்து பிரிவினரின் நலன்களிலும் அக்கறைகொண்டு செயல்பட்டு வருகிறது. வருமானவரி தள்ளுபடியை பொறுத்தமட்டில் முதல் பட்ஜெட்டிலேயே 50 ஆயிரம் ரூபாய் உயர்வை அளிக்கும் வகையில் வருமானவரி கட்டும் வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் 5 ஆண்டுகளில் செய்ததை மோடி அரசாங்கம் ஒரே ஆண்டில் வருமானவரி வரம்பை உயர்த்தி செய்து காட்டியிருக்கிறது. மேலும் வரி விகிதம் என்பது நாட்டின் பொருளாதார அடிப்படையிலும், சாத்தியக்கூறு அடிப்படையிலுமே தான் கணக்கிடப்படுகிறதே தவிர, குறுகியகால லாபத்துக்கு இல்லாமல், நாட்டின் நீண்டகால வளத்தை கருத்தில் கொண்டே கணக்கிடப்படுகிறது.

கேள்வி:– பா.ஜ.க. அரசாங்கம் சூட்டும், பூட்சும் அணிந்த மேல்தட்டு மக்களுக்கான அரசாங்கம் என்று கூறிவரும் ராகுல் காந்தி, இந்த அரசாங்கத்துக்கு 10–க்கு 0 மார்க் கொடுத்து இருக்கிறார். மக்கள் இந்த அரசாங்கத்துக்கு எத்தனை மார்க் கொடுத்து இருக்கிறார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்:– கடந்த ஆண்டு மே மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலிலேயே காங்கிரசை விரட்டியடிக்கும் தீர்ப்பை இந்திய மக்கள் வழங்கிவிட்டனர். 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஜீரோ அதாவது 0 இடங்கள்தான் கிடைத்துள்ளது. 0 இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்த மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. அதன்பிறகு ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், மராட்டிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் மக்கள் காங்கிரஸ் கட்சியை புறந்தள்ளி ஓட்டு போட்டு இருக்கிறார்கள். எனவே இந்திய மக்களிடம் யார் 0 வாங்கியிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர்களின் சூழ்நிலையை நன்றாகவே புரிய முடிகிறது. விரக்தியின் அடிப்படையிலேயே காங்கிரஸ் கட்சியினர் இத்தகைய அறிக்கையை வெளியிடுகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தை பொறுத்தமட்டில் பிரதமர் நரேந்திர மோடியே பல சந்தர்ப்பங்களில் எங்கள் அரசாங்கம் ஏழைகளுக்கான அரசாங்கம் என உறுதிபட சொல்லியிருக்கிறார்.

கேள்வி:– காங்கிரஸ் கட்சி, இந்த பாஜக. அரசாங்கம் விவசாயிகளுக்கு எதிரான, நடுத்தர மக்களுக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான, ஆனால் தொழில் அதிபர்களுக்கு, செல்வந்தர்களுக்கு ஆதரவான அரசாங்கம் என்ற தோற்றத்தை மக்களிடம் உருவாக்க முயற்சி செய்கிறதே? அதுபற்றி எந்த வகையில் மறுக்கப்போகிறீர்கள்?

பதில்:– ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை தொழில் நிறுவனங்களுக்கு யார் இலவசமாக வழங்கினார்கள்? நிலக்கரி சுரங்கங்களை எந்த அரசாங்கம் தொழில் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கினார்கள்? கடந்த 10 ஆண்டுகளாக யார் மக்கள் பணத்தையும், இயற்கை வளங்களையும் கொள்ளை அடித்தார்கள்? ஏழை விவசாயிகளின் சாகுபடி நிலங்களை யார் கட்டாயப்படுத்தி கையகப்படுத்தி காங்கிரஸ் கட்சி தலைவர்களின் உறவினர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் கொடுத்தார்கள்? இதற்கெல்லாம் பதில் காங்கிரஸ் கட்சி என்பது தான்.

இயற்கை வளங்களை காங்கிரஸ் கட்சி தொழில் நிறுவனங்களுக்கு இலவசமாக கொடுத்தது என்றால் யார் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவானவர்கள்? தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள், ஏழை மக்களின் நலனுக்காக நிலம், கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ஏழை மக்களின் மகன், மகள்கள் அவர்கள் ஊரிலேயே வேலைவாய்ப்பு பெறக்கூடாதா? விவசாயிகள் நீர்ப்பாசன வசதி பெறக்கூடாதா? இதைத்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் நிறைவேற்றிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்து வழங்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இதில் செய்யப்படும் தவறான பிரசாரம் எல்லாம் அற்பாயுசு கொண்டது தான்.

கேள்வி:– உங்கள் அரசாங்கத்தின் முயற்சிகள் எல்லாம் கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் போய் சேர்ந்துள்ளதா?

பதில்:– மோடி அரசாங்கம் ஏழை மக்களின் மேம்பாட்டு திட்டங்களைத்தான் நம்பிக்கொண்டு இருக்கிறது. இந்த இலக்கை அடையத்தான் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டம், ஆயுள்காப்பீட்டு திட்டங்கள், பென்ஷன் திட்டங்களெல்லாம் மோடி அரசாங்கம் நாட்டில் உள்ள மக்களுக்கான சேவை பணியில் சரியான பாதையில்தான் சென்று கொண்டு இருக்கிறது என்பதை காட்டுகிறது. எங்கள் கொள்கையே ஒன்றுபடுவோம், ஒன்றாக உயர்வோம் என்பது தான். 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு உலகில் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடும் போது நமது வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமான அளவில் இருக்கிறது என்பது வெட்கக்கேடானது.

கேள்வி:– வரும் ஆண்டுகளில் உங்கள் அரசாங்கம் எதிர்நோக்கப்போகும் சவால்கள் என்ன? இன்னும் விரைவான செயல்பாடுகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

பதில்:– இந்தியாவில் பூகோள அமைப்பில் உள்ள வித்தியாசங்கள், வேற்றுமைகள், விஞ்ஞான ரீதியிலான மக்கள் தொகையியல் ஆகியவைகளைப் பார்க்கும்போது பல விஷயங்களில் சவால்களை இந்தியா எதிர்நோக்கியிருக்கிறது. நாட்டின் மேம்பாட்டில் இந்த சவால்களை யெல்லாம் நாங்கள் வாய்ப்புகளாகவே பார்க்கிறோம். மக்கள் உயர்வடைய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

கேள்வி:– சிறுபான்மையினர் மனதில் எப்படி நம்பிக்கையை ஊட்டப்போகிறீர்கள்? மதமாற்ற தடைசட்டத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன? அதற்கு என்ன காரணம்?

பதில்:– சமுதாயத்தின் எந்த பிரிவு மக்களின் மனதிலும் நம்பிக்கை இன்மையை நான் பார்க்கவில்லை. நாங்கள் சமாதானப்படுத்துதல், பிரிவினை அரசியலை நம்பவில்லை. எங்கள் கொள்கையான ஒன்றாக இணைவோம் – ஒன்றாக உயர்வோம் என்ற அடிப்படையுடன்தான் எங்கள் திட்டங்களை வகுக்கிறோம். மதமாற்ற தடை சட்டத்தை பொறுத்தமட்டில் அதற்கு பொது விவாதம் தேவை. ஜனநாயக முறையில் பொது விவாதம் இன்றியமையாத ஒன்றாகும்.

கேள்வி:– பா.ஜ.க. அரசின் 2–ம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, மூத்த குடிமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பலன் அளிக்கும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று யூகங்கள் வருகிறதே! உண்மையா?

பதில்:– ஏழை மக்கள் பயனடைய குறிப்பாக பெண்கள், மூத்த குடிமக்கள் விவசாயிகள் நலனுக்காக மோடி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எடுத்துக்காட்டாக மோடி அரசாங்கம் கொண்டுவந்துள்ள ஜீவன் பிரமான் திட்டம் மூத்த மக்களின் இன்னல்களை போக்கும். வளர்ச்சி என்பது ஒரு செயல்முறை. தேவைப்படும் நேரத்தில் எல்லாம் அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்.

கேள்வி:– பா.ஜ.க. அரசாங்கத்தின் மீது இதுவரையில் ஊழல்குற்றச்சாட்டு எதுவும் இல்லை என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஊழலை நாட்டை விட்டே விரட்டும் வகையில் இப்போதுள்ள தடுப்பு சட்டங்களை இன்னும் வலிமையானதாக்க உங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துவீர்களா?

பதில்:– அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களில் ஊழலை ஒழிக்க பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அவைகளில் ஒன்றுதான் ஊழல் ஒழிப்பு நிர்வாக அமைப்பு. நாட்டை விட்டே ஊழலை மோடி அரசாங்கம் விரட்டி அடிக்கும் இவ்வாறு அமித் ஷா கூறினார்.

Leave a Reply