எதிர்வரும் நாள்களில் கடன்களுக்கான வட்டி விகிதத்தை மிகப் பெரிய அளவில் குறைக்கப் போவதாக பொதுத்துறை வங்கிகள் உறுதியளித்துள்ளன என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியகாலக் கடன்களுக்கான வட்டிவிகிதத்தை (ரெப்போ ரேட்), ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி முதல் மூன்று தவணைகளாக மொத்தம் 0.75 சதவீதம் வரை குறைத்துள்ளது.

இந்த வட்டிவிகிதத்தை, ரிசர்வ் வங்கி, கடந்த 2-ம் தேதி 0.25 சதவீதம் குறைத்தபிறகு, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட சில வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு தாங்கள்வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்தன. எனினும், மற்ற வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை.

இந்நிலையில், தில்லியில் பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம், நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில், நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஜேட்லி கூறியதாவது:

வரவு-செலவு கணக்கில் சாதகமற்ற நிலை, சேமிப்புத் திட்டங்களுக்கு அதிகவட்டி விகிதம் ஆகிய காரணங்களால், சிலவங்கிகள் கடன்களுக்கான வட்டிவிகிதத்தை குறைக்க இயலவில்லை என தெரிவித்தன.
எனினும், வங்கிகளின் செயல்பாடுகள் முன்பை விட நன்றாக இருப்பதால், தற்போதைய சூழல் நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.

அடுத்த சிலநாள்களில் அல்லது அடுத்த சிலவாரங்களில், சில வங்கிகள் மிகப்பெரிய அளவில் வட்டி விகித்தைக் குறைக்கும்.

வாரா கடன்களின் நிலை: நிகழாண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) வாரா கடன், 5.64 சதவீதத்தில் இருந்து 5.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது மேலும்குறையும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனினும், முதல் காலாண்டை மட்டும் வைத்து முடிவு செய்து விட முடியாது. மேலும், வாரா கடன் விவகாரத்தில் முன்னேற்றம் கிடைத்துள்ளதா என்பது, அடுத்த 2-3 காலாண்டுகளுக்கு பிறகே தெரியவரும் என்று வங்கிகள் கணித்துள்ளன.

அதிக அளவில் வாரா கடன்களை வைத்திருக்கும் வங்கிகளிடம், அதற்கான காரணங்களை கேட்டிருக்கிறோம். அடுத்த சில மாதங்களில், இந்தவிவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக ஆராய உள்ளது.
பொது துறை வங்கிகளின் கோரிக்கைகளை ஏற்று, அவற்றுக்கு கூடுதல் மூலதனமாக, ரூ.7,900 கோடியை கடந்த 2015-16-ம் நிதியாண்டின் பட்ஜெட்டில் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இந்த நிதி போது மானதாக இல்லை என்றும், கூடுதலாக நிதி ஒதுக்கவேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

நிதிப் பற்றாக் குறை காரணமாக முடங்கியுள்ள திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, அந்த திட்டங்களின் பட்டியலை நிதிச்சேவைகள் செயலர் தயாரிக்க உள்ளார்.

அந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, அடுத்த சிலநாள்களில் மாநில அதிகாரிகளுடனான கூட்டத்துக்கு அவர் ஏற்பாடுசெய்வார். தேவைப்பட்டால் நானும், எனது தரப்பில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வேன்.

பொருளாதார வளர்ச்சி: கடந்த சில ஆண்டுகளில் கடுமையான சவால்களை சந்தித்த நமது பொருளாதாரம், தற்போது மீண்டுவருகிறது. நமது பொருளாதாரம் வேகமாகவளர்ந்து வருவதாக சர்வதேச அமைப்புகள் பட்டியலிட்டு இருப்பதால், நாம் கொஞ்சம் திருப்தியடைந்து கொள்ளலாம். எனினும், நமது இலக்கு இன்னும் உயர்வானதாக உள்ளது.

சமூக பாதுகாப்புத் திட்டங்கள்: பிரதமரின் விபத்து காப்பீட்டுத்திட்டம் (ஜன் சுரக்ஷா பீமா), பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (ஜீவன் ஜோதி பீமா) ஆகிய 2 புதிய காப்பீட்டு திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களில் கடந்த ஒருமாத காலத்தில் மட்டும் 10.17 கோடி பேர் இணைந்துள்ளனர் என்றார் அருண் ஜேட்லி.

கடன்வளர்ச்சி நிலவரம், கல்விக் கடன், வீட்டு வசதிக்கடன், சிறு, குறு தொழில் முனைவோருக்கான "முத்ரா' வங்கியை செயல்படுத்து வதற்கான திட்டங்கள் ஆகியவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Leave a Reply