விவசாயிகள் மற்றும் கிராமத்தினர் மத்தியில் நம்பிக்கை, முன்னேற் றத்தை மத்திய அரசு ஏற்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திரமோடி கூறினார். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த கரும்பு விவசாயிகள் 150 பேர், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்தனர்.

அப்போது, கரும்பு விவசாயிகளின் நலனுக்காக ரூ.6 ஆயிரம்கோடி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் அவர்கள் மோடி சந்தித்தனர். பின்னர் அவர்களிடம் பிரமதர் நரேந்திர மோடி பேசியதாவது: கிராமங்களுக்கு 24 மணிநேர மின்வசதியை ஏற்படுத்தி தருவதற்கு, எனது தலைமையிலான அரசு பாடுபட்டுவருகிறது. இதனால், கிராமப்புற மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடையும். அங்கு புதியவேலை வாய்ப்புகள் பெருகும். விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், மண்ணின் தன்மையை அறிந்து, விவசாயிகள் பயிர்செய்ய முடியும். இதனால், அநாவசிய செலவுகள் மிச்சமாகும். சொட்டு நீர்பாசன திட்டத்தின் மூலம், குறைந்த அளவுநீரில், அதிகளவு பயிர்களை விவசாயிகள் பயிரிடமுடியும். எனது அரசால், சமூக நலதிட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப் படுகிறது. நேரடி மானிய திட்டத்தின் மூலமாக, இடைத்தரகர்கள் முறை ஒழிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு வழங்க கூடிய உதவிகள், விவசாயிகளிடத்தில் முழுமையாக சென்றடையும். விவசாயிகளின் மேம்பாட்டிற்கு மத்திய அரசு ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். இந்த சந்திப்பின் போது, பாஜ தலைவர் அமித்ஷா, விவசாயத் துறை இணை அமைச்சர் சஞ்சீவ் பல்யான், உத்தர பிரதேச பாஜ தலைவர் லக்‌ஷ்மி காந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Reply