சர்வதேச யோகாதினத்தை முன்னிட்டு நாளை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 25 ஆயிரம்பேர் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சிக்கு ஈஷாயோகா மையம் ஏற்பாடு செய்துள்ளது.

மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு இதில் பங்கேற்கிறார். இந்தியாவின் மன மற்றும் உடல் வளக் கலையான யோகாவை உலகளவுக்கு கொண்டுசெல்ல மத்திய அரசு தொடர்முயற்சிகள் எடுத்தது. இதன் விளைவாக, ஐக்கியநாடுகள் சபை, ஜூன் 21ம் தேதியை உலகயோகா தினமாக கொண்டாட ஒப்புதல் அளித்துள்ளது. முதலாவது, சர்வதேச யோகாதினம் நாளை கொண்டாடப்படுகிறது. எனவே, நமது பாரம்பரியத்தை உலகிற்கு வெளிச்சம் போட இந்த தினத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு முழு வீச்சில் தயாராகிவருகிறது.

டெல்லி ராஜ பாதையில் மிக பிரமாண்டமாக யோகாசன நிகழ்ச்சி நாளை நடக்கிறது, பிரதமர் மோடி அதில் பங்கேற்கிறார். அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் பங்கேற்கிறார். சென்னையில், ஈஷாயோகா மையத்தின் பங்களிப்புடன் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக ஈஷா யோகா மையத்தின் இயக்குநர் கோபால் கூறியதாவது: உலக யோகாதினத்தை முன்னிட்டு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. ஈஷாயோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கலந்து கொண்டு நேரடியாக பயிற்சி அளிக்கிறார்.

காலை 6.15 மணிக்கு பிரபல கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதன் இசையுடன் நிகழ்ச்சிதொடங்கும். மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு திரு விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார் .

Leave a Reply