வங்கதேசத்துடன் இந்தியா சமீபத்தில் செய்துகொண்டுள்ள உடன்படிக்கை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. காஷ்மீர் பிரச்சினைக்கு இணையான நில எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடிந்ததுடன், இந்தியத் துணைக் கண்டம் முழுவதையும் ஒரே வர்த்தக மண்டலமாக்கும் நோக்கம் கொண்டது. வணிகமும் முதலீடும் பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திரத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

நம்முடைய பக்கத்து நாடுகளின் தேவைகள் என்ன என்று பதவியேற்ற முதல் நாளிலிருந்தே அவர் செலுத்தி வரும் அக்கறையால் நல்ல பலன்கள் விளைகின்றன. "துப்பாக்கி முனையில் அதிகாரம் பிறப்பதில்லை, அரிசிக் கலயத்திலிருந்துதான் பிறக்கிறது" என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கிறார். இந்திய மரக்கலங்களும் வாணிபப் பெருங்குடிகளும் இந்தியாவுக்கு ஏற்படுத்தி வைத்த செல்வாக்கைப் புரிந்துகொண்டு அந்தப் பாணியில் பயணிக்கிறார் மோடி.

இந்திய, வங்கதேச நாடுகளுக்கு இடையிலான நிலங்களைப் பகிர்ந்துகொள்வது பற்றிய ஒப்பந்தம் பற்றி மட்டுமே அதிகம் பேசப்பட்டிருந்தாலும், இதர ஒப்பந்தங்களும் முக்கியமானவை. இப்போது இந்தியச் சரக்குகள் சிங்கப்பூர் வழியாகத்தான் வங்கதேசத்துக்கு 3 வாரங்கள் பயணம் செய்து சென்றடைகின்றன.

புதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்தால் ஒரே வாரத்தில் இந்தியச் சரக்குகள் வங்கதேசத்துக்குச் சென்றுவிடும்; இந்திய நிறுவனங்கள் வங்கேதசத்துக்கு மின்சாரத்தை விற்பனை செய்யும். வங்கதேசத்தின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இந்திய நிறுவனங்கள் உற்பத்தியில் ஈடுபடும். இதனால் வங்கதேசத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் ஏற்படுவதுடன், வெளிவர்த்தகப் பற்றுவரவில் அந் நாட்டுக்கு இருக்கும் பற்றாக்குறையையும் வெகுவாகக் குறைக்கும்.

வங்கதேசத்துக்கு இந்தியா தரும் 200 கோடி டாலர் கடனுதவியானது இந்திய ஏற்றுமதிகளுடன் தொடர்புடையது. எனவே இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். இந்தியா மீது வீணாக சந்தேகப்பட்டுக்கொண்டு விலகி நிற்பதைவிட இணைந்து பணியாற்றினால் ஏற்படக்கூடிய லாபங்கள் என்ன என்று இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் போன்றவற்றுக்கு உணர்த்தும் வகையில் இந்தச் செயல்கள் அமைந்துள்ளன. எல்லாவற்றையும் விட முக்கியம், கடந்த காலத்தில் உலக வர்த்தகத்தில் இந்தியா பெற்றிருந்த முதலிடத்தை நினைவுகூரும் விதத்தில் இவை இருக்கின்றன.

இந்தியாவுக்குத் தொடர்ச்சியாக 5,000 மைல்கள் நீள கடற்கரை இருக்கிறது என்பதை மறந்த நிலையிலேயே நாம் இருக்கிறோம். ஒரு சமயத்தில் உலக வர்த்தகத்தில் 25% இந்தியாவால் மேற்கொள்ளப்பட்டது. இன்றோ உலக வர்த்தகத்தில் நம்முடைய பங்களிப்பு வெறும் 2% தான். அந் நாளில் ஏற்றுமதி மூலம் அதிக லாபம் அடைந்த நாடு இந்தியாதான். சேர நாட்டிலிருந்த (கேரளம்) முசிறி துறைமுகம் 2,000 ஆண்டுகளுக்கு முன்னால் உலக அளவில் பிரபலமாக இருந்தது.

ரோமப் பேரரசிலிருந்து குறைந்தபட்சம் அன்றாடம் ஒரு கப்பலாவது தமிழகக் கடற்கரைக்கு வந்து நங்கூரம் பாய்ச்சும். தமிழகத்திலும் கேரளத்திலும் விளையும் அகில், சந்தனம், மிளகு, ஏலக்காய், பருத்தியாடைகள் போன்றவற்றை வாங்கிக்கொள்ளும். தமிழர்களோ ரோமானியப் பேரரசிடமிருந்து எதையும் அதிசயமாகக் கருதி வாங்காமல் தங்கம் அல்லது வெள்ளியை வாங்கிக்கொண்டு வாணிபக் கணக்கை முடிப்பார்கள்.

ரோமாபுரி சாம்ராஜ்யத்து நாடாளுமன்ற மூத்த உறுப்பினர்கள், "இப்படி தமிழ்நாட்டு வாசனைத் திரவியங்களுக்கும் மசாலா வகைகளுக்கும் முத்துக்கும் ஆடம்பரச் சாதனங்களுக்கும் ஆசைப்பட்டு விலை மதிக்க முடியாத தங்கத்தை நம் நாட்டுப் பெண்கள் வீண் செய்கிறார்களே!" என்று அங்கலாய்ப்பார்கள்.

ரோமானியர்களின் கையிருப்பு தங்கத்தில் மூன்றில் இரண்டு மடங்கு இந்தியாவில் அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில்தான் அடைக்கலமாகும். கொற்கையில் விளையும் முத்துக்களை விரும்பி அணிவார்கள் ரோமாபுரிப் பெண்கள். தமிழ் சங்கக் காலத்தில் இருந்த முசிறி என்ற துறைமுக நகரம் 14-வது நூற்றாண்டில் பெரியாறில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அழிந்தது. அந்த இடத்தில்தான் இப்போதைய கொச்சி நகரம் ஏற்பட்டிருக்கிறது.

ரோமானியர்களுக்குப் பிறகு போர்ச்சுகீசியர்களும் இதே குற்றச்சாட்டைத் தங்கள் நாட்டுப் பெண்கள் மீது சுமத்தினார்கள். "நாங்கள் அரும்பாடுபட்டு தென்னமெரிக்காவிலிருந்து தங்கத்தை அகழ்ந்து கொண்டுவந்தால் அதை இப்படித் தமிழ்நாட்டு முத்துக்களுக்கும் வாசனைப் பொருள்களுக்கும் இன்ன பிறவற்றுக்கும் கொடுக்க வைக்கிறீர்களே" என்று முணுமுணுப்பார்கள். 17-வது நூற்றாண்டில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திலும் இதே மாதிரியான குரல்கள் ஒலித்தன.

"இந்தியாவில் கிடைக்கும் கறி மசாலாக்கள் நம்முடைய உணவுப் பழக்கத்தை ஆக்கிரமிக்கின்றன, அவர்களுடைய பருத்தி ஆடைகளோ நம்மையே ஆக்கிரமிக்கின்றன, நம்முடைய அரிய வளமெல்லாம் இந்தியாவுடனான வர்த்தகத்தில் கரைந்துவிடுகிறதே" என்று கவலைப்பட்டார்கள். இந்தியாவில் தயாராகும் பருத்தித் துணிகள் உள்ளாடைகளுக்கு ஏற்ற விதத்தில் மிருதுவாக இருந்ததால் கிழக்கிந்தியக் கம்பெனி அந்த வியாபாரத்தில் கவனம் செலுத்தியது. ரோமானியர்கள் அணியும் டோகாஸ் என்ற மேலாடைகூட இந்திய பருத்தித் துணியில் நெய்யப்பட்டதுதான்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த க்ஷத்திரியர்கள் இமயமலையை ஒட்டிய வாணிபப் பாதையில் பொதிகள் ஏற்றிய குதிரைகளுக்குக் காவலாகச் சென்று ஐரோப்பிய நாடுகளுடன் வியாபாரம் பெருக உதவினார்கள். இப்போது பாகிஸ்தானில் இருக்கும் மூல்தான் (மூலஸ்தான்) முக்கிய இடை நகரமாக விளங்கியது.

இந்தியப் பொருள்களால் பாரசீகம் தொடங்கி ரஷியா வரை மக்களின் வாழ்க்கை முறையே பெரும் மாற்றம் அடைந்தது. பிரான்ஸ் நாட்டுத் துறவி ஒருவர் ஈரானை ஆண்ட சஃபாவித் பேரரசை, இருபுறம் வாயில்கள் கொண்ட பெரிய சத்திரத்துடன் ஒப்பிட்டார். "மேற்கு வாயில் வழியாக தங்கமும் வெள்ளியும் ஈரானுக்குள் வருகிறது; கிழக்கு வாயில் வழியாக அது இந்தியாவுக்குச் செல்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். உலகில் உள்ள எல்லா செல்வங்களும் இந்தியாவையே தஞ்சம் அடைகின்றன என்றும் குறிப்பிட்டிருக்கிறார்!

தங்கத்தின் மீது இந்தியர்களுக்குள்ள ஆசை இப்போதும் குறையவில்லை. இங்கிலாந்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழில் புரட்சி ஏற்படும் வரையில் இந்தியாதான் ஏற்றுமதியில் சிறந்து விளங்கியது, அதற்கு ஈடாக தங்கத்தையும் வெள்ளியையும் வாங்கிக் குவித்தது.

லங்காஷைரில் முகிழ்த்த நவீன ஜவுளி ஆலைகள் மிகக் குறைந்த செலவில் மிக நேர்த்தியாக நல்ல தரத்தில் துணிகளைத் தயாரிக்கத் தொடங்கின. அதனால் இந்தியாவின் கைத்தறித் துணிகள் சந்தை இழந்தன. இந்திய நெசவாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதற்குக் காரணம் நவீனத் தொழில்நுட்பம் என்பதைப் புரிந்துகொள்ளாமல், இங்கிலாந்தின் வர்த்தகத் தந்திரம்தான் இந்தியர்களை வஞ்சிக்கிறது என்று தேசியவாதிகள் குற்றஞ்சாட்டினர்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நாம் நம்முடைய பண்டைய வரலாற்றை மறந்துவிட்டோம். நம்முடைய எல்லைகளை இழுத்து மூடினோம். இறக்குமதிக்குப் பதிலாக உள்நாட்டிலேயே தயாரிப்பது என்ற சுதேசிக் கொள்கையைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றினோம். சர்வதேச வர்த்தகத்தின் நற்பலன்களைப் புறக்கணித்தோம். 1991-ல்தான் நாம் விழித்துக்கொண்டோம்.

மோடி இப்போதைய இந்தியாவுக்கு உலக வர்த்தகத்தில் முன்பிருந்த ஆதிக்கத்தை மீண்டும் ஏற்படுத்த விரும்புகிறார்.  உலக வர்த்தகம் என்பதில் வாங்குபவர், விற்பவர் இருவருமே பயனடைகிறார்கள் என்பதை அந்த அமைப்பினர் புரிந்துகொள்ளவில்லை.

சர்வதேச அரங்கில் இந்தியாவின் அதிகாரம் எப்போதும் வன்மையாக இருந்ததில்லை, மென்மையாகவே இருந்திருக்கிறது. ராணுவ பலத்தினால் அல்ல, ஏற்றுமதி வளத்தினால்தான் இந்தியா செல்வாக்கு பெற்றிருந்தது. நாலாவது நூற்றாண்டு தொடங்கி 12-வது நூற்றாண்டு வரையில் இந்தியாவின் செல்வாக்கு தெற்கிழக்கு ஆசியாவிலிருந்து மத்திய ஆசியா வரை பரவியிருந்தது என்கிறார் ஷெல்டன் பொல்லாக் என்ற சம்ஸ்கிருத அறிஞர்.

இப்பகுதிகளில் இருந்த அரசுகளிலும் நீதிமன்றங்களிலும் ஆட்சி மன்றங்களிலும் உயர் குடிமக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் மொழிகளில் ஒன்றாக சம்ஸ்கிருதமும் இருந்தது மத்திய கால ஐரோப்பாவில் லத்தீன் இருந்ததைப்போல; அக்காலத்தில் எல்லா நாடுகளிலும் உயர் குடிமக்கள் பல மொழிகளைக் கற்றுப் பேசி வந்தனர். சம்ஸ்கிருதம் என்பது எல்லைகடந்த தகவல் தொடர்பு மொழியாக இருந்தது.

இந்தியக் கலாசாரம் எப்படி கீழை நாடுகளுக்கும் மத்திய ஆசியாவுக்கும் பரவியது என்று தெரியாவிட்டாலும் வாணிபத்தின் மூலமாகப் பரவியிருக்கும் என்று ஊகிக்க இடம் இருக்கிறது. யாழ்ப்பாணம், சாவகம், சுமத்திரா போன்ற தீவுகளுக்கு இந்திய நாவாய்கள் தங்கம் பெற்று வருவதற்காகப் போனதைத் தமிழின் சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. அந்த கப்பல் பயணங்கள் மிக நீண்டவை. கப்பலில் சென்றவர்களுக்கு சடங்குகளைச் செய்ய உதவியாக இருப்பதற்காக பிராமணர்களும் பவுத்த பிட்சுகளும் சென்றதாக சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. "உலக வரலாறு என்பது வாள்களின் வீரம் தொடர்பான வரலாறுதான், இந்தியா மட்டுமே ஆன்மிகம் மூலம் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திக்கொண்டது" என்கிறார் மைக்கேல் உட் என்ற வரலாற்று ஆசிரியர்.

நம் நாடு சுதந்திரம் அடைந்த 68 ஆண்டுகளில் நம்முடைய பக்கத்து நாட்டவர்கள் நம்மை வெறுத்ததுதான் அதிகம். நம்முடைய வெளியுறவுத்துறை அதிகாரிகளும் அவர்களை ஒன்றுக்கும் லாயக்கற்றவர்கள் என்றே பார்க்கப் பழகியிருந்தனர். "இந்தியாவுக்கு அருகிலும், கடவுளுக்கு தொலைவிலும் இருக்கின்றோம்" என்றே கூறிவந்தனர்.

மோடியின் வித்தியாசமான அணுகுமுறை அவர்களைக் கவர்ந்துள்ளது. அவருடைய பொருளாதார ராஜதந்திரம் வங்கதேசத்தில் முதல் வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறது. அது புதிய வாய்ப்புகளுக்கு வாயில் கதவைத் திறந்துவிட்டிருக்கிறது. இதே அணுகுமுறையை மோடி தொடரும்போது அதிகாரிகளும் ஒத்துழைத்தால் பக்கத்து நாடுகளுடனான உறவு நிச்சயம் மேம்படும்.

"வெவ்வேறு பிரதேசங்களையும் பழக்க வழக்கங்களையும் கலாசாரங்களையும் கொண்ட மக்கள் தாங்கள் மிகவும் போற்றும் தேசத்தை இந்தியாவென அழைக்கின்றனர்" என்று 7-வது நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த யாத்ரிகர் யுவான் சுவாங் குறிப்பு எழுதியிருக்கிறார்.

Leave a Reply