மத்திய அரசு கொண்டுவரும் தொழிலாளர் சீர்திருத்தங்களை பலசங்கங்கள் எதிர்த்து வரும் சூழ்நிலையில், பொருளாதார நடவடிக்கையை பாதிக்கும்வகையில் முதலீடுகளை முடக்கினால் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி டெல்லியில் நடந்த 46வது தேசிய தொழிலாளர் மாநாட்டில் அவர் பேசியதாவது:-

உலகில் பலநாடுகள் பொருளாதார வளர்ச்சியில் சவால்களை சந்தித்துவரும் நிலையில், இந்தியா மட்டுமே பொருளாதாரத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்துவருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், குவிந்து கொண்டிருக்கும் முதலீடுகளை நிறுத்தினால் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க முடியாது. உலக பொருளாதாரமே சரிவை சந்தித்து கொண்டிருக்கும் போது மத்திய அரசு இந்திய பொருளா தாரத்தை வலுப்படுத்த முயற்சிசெய்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு புதிதாக முன்மொழிந்துள்ள தொழிலாளர் நல சீர்திருத்தங்கள் அனைத்தும் நிறுவனங்கள் தங்களுடைய வர்த்தகத்தை எளிதாக செய்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

அப்போதுதான் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். எந்த ஒருதொழிலாளர் சங்க தலைவரும் பொருளாதாரத்தை பாதிக்கும், வேலை வாய்ப்புகளை குறைக்கும் முடிவுகளை எடுக்கக் கூடாது. வளர்ச்சி விகிதம் அதிகரிப்பது தொழிலாளர்களுக்கு நன்மையைத் தான் வழங்கும். மத்திய அரசு கொண்டு வரும் புதிய வரிவிதிப்பு முறைகள் வேலை வாய்ப்புகளை புதிதாக உருவாக்கக்கூடியவை. திடமான தொழிற்சாலைகள் அதிகசம்பளத்தை வழங்க முடியும். அரசாங்கமும் தொழிலாளர்களுக்கு சமூகபாதுகாப்பை வழங்க முடியும். எனவே, நாட்டின் பொருளா தாரத்தை சரியான பாதையில் எடுத்துச்செல்வது அரசின் பொறுப்பு.என்று  அருண் ஜெட்லி தெரிவித்தார்.

Leave a Reply