பிகார் மாநில மக்களை முதல்வர் நிதீஷ்குமார் ஏமாற்றிவிட்டார்; லாலு பிரசாத்துடன் சேர்ந்து மீண்டும் காட்டாட்சியை அமைக்க நிதீஷ் முயலுகிறார்.

பிகாரை ஒரு வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றவேண்டும் என்ற பேராவல் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. இயற்கையிலேயே பிகார் கனிமவளம் நிறைந்த மாநிலமாகும். ஆனால், முந்தைய ஆட்சியாளர்களால் இம்மாநிலம் வளர்ச்சி பாதையிலிருந்து பின்னுக்குத் தள்ளபட்டுவிட்டது.

பிகாரில் ஆட்சிபுரியும் நிதீஷ்குமார், மாநிலத்தின் வளர்ச்சிக்காக எதையேனும் செய்தாரா என்றால் கட்டாயமாக இல்லை. தேர்தல் பிரசாரத்தின் போது நிதீஷ் குமார் கூறியதை உங்களுக்கு (மக்களுக்கு) மீண்டும் நினைவுப்படுத்துகிறேன்.

பிகாரில் 24 மணிநேரமும் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்ய வில்லை எனில், 2015-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சேகரிக்கதான் வரப்போவதில்லை என நிதீஷ் கூறினார்.

இப்போது பிகாரில் 24 மணிநேரமும் மின்சாரம் விநியோகிக்கபடுகிறதா? மாறாக, கடுமையான மின் பற்றாக் குறையால் அல்லவா மக்கள் அவதியுறுகின்றனர்? பின்னர், எந்த முகத்துடன் நீங்கள் (நிதீஷ் குமார்) மக்கள் மத்தியில் மீண்டும்வந்து வாக்கு சேகரிக்கிறீர்கள்?

லாலுபிரசாத்தின் ஆட்சிக் காலத்தை "காட்டாட்சி' என விமர்சித்தவர் நிதீஷ்குமார். ஆனால், இப்போது லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் அவர் கூட்டணி அமைத்துள்ளார். இதனால், மீண்டும் பிகாரில் காட்டாட்சியை அமல்படுத்த நிதீஷ்குமார் முயலுகிறார்.

நிதீஷ் குமாரைப் பொருத்தவரை, அவர் அரசியல் தீண்டாமையை முன்னெடுத்து செல்லக் கூடியவர். முன்பு பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால், மக்களவை தேர்தலில் என்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் பாஜக.,வுடனான கூட்டணியை அவர் முறித்துக் கொண்டார்.

இதன்மூலம் தேர்தலில் வாக்களித்த மக்களின் முதுகில் அவர் குத்தி விட்டார். என் மீது தனிப்பட்ட முறையில் விரோதம் இருந்தால் நிதீஷ்குமார் என்னை பழிவாங்கிக் கொள்ளட்டும். ஆனால், பிகார் மக்களின் வளர்ச்சியை தடுக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

பிகாருக்கு பெருமளவு நிதி ஒதுக்கீடு: மக்களவை தேர்தலுக்கு முன்பாக பிகாருக்கு ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்திருந்தேன். ஆனால், பிகாரின் வளர்ச்சிக்கு இந்தநிதி போதாது என்பதை தற்போது உணர்ந்திருக்கிறேன்.

எனவே, முன்பு அறிவித்த ரூ.50,000 கோடிக்கும் அதிகமான நிதியை பிகாருக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளேன். எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பதை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு பிறகு அறிவிப்பேன்.

முதல்வர் நிதீஷ் குமாரும், ராஷ்ட்ரீய ஜனதா தலைவர் லாலு பிரசாத்தும் அடிப்படையில் எதிரெதிரான நிலைப் பாட்டையும், கொள்கைகளையும் கொண்டவர்கள். இப்போது அரசியல் ஆதாயத்துக்காக அவர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

பிகாரின்வளர்ச்சி குறித்து அவர்களுக்கு அக்கறை கிடையாது. எனவே, அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளித்து ஏமாறாதீர்கள். பிகாரின் முன்னேற்றத்துக்கு உறுதி பூண்டுள்ள பாஜகவை தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் வகையில் வாக்களியுங்கள். பிகாரின் முன்னேற்றத்துக்கு நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன் என்றார் நரேந்திரமோடி.

Leave a Reply