நாட்டில் எண்ணற்ற வரிகள் உள்ளன. ஒரே விதமான வரி கிடையாது. இதனால், வரிமீது வரி என்ற நிலையே காணப்படுகிறது. எனவே, சிக்கலான மறைமுக வரி விதிப்பை எளிமைப்படுத்துவதே சரக்கு, சேவைவரியின் நோக்கம். இந்தவரியை கொண்டு வருவது பற்றி மத்திய நிதி மந்திரியாக

இருந்த ப.சிதம்பரம்தான், 2006-2007-ம் நிதியாண்டு பட்ஜெட் உரையில் முதல் முறையாக அறிவித்தார். மாநில நிதி மந்திரிகளுடனான விரிவான ஆலோசனைக்குப் பிறகு, 2011-ம் ஆண்டு அப்போதைய நிதிமந்திரி பிரணாப் முகர்ஜி, அந்த மசோதாவை திருத்தங்களுடன் தாக்கல்செய்தார். அது, பாராளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு, 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால், பாராளுமன்றம் கலைக்கப் பட்டதால், மசோதா காலாவதி ஆனது.

பின்னர், எங்கள் ஆட்சியில், மாநில நிதிமந்திரிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினோம். கருத்து ஒற்றுமை ஏற்பட்டபிறகு, சில திருத்தங்களுடன், சரக்கு, சேவைவரி மசோதாவை தாக்கல் செய்தோம். இந்த மசோதா மீது காங்கிரஸ் கட்சி சில ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளது. ஆனால், அக்கட்சி கூறிய யோசனைகள், ப.சிதம்பரம் கொண்டு வந்த மசோதாவிலோ, பிரணாப்முகர்ஜி கொண்டு வந்த மசோதாவிலோ கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டுவந்த சரக்கு, சேவை வரி மசோதாவில் நாங்கள் எந்த குறிப்பிடத்தக்க மாற்றமும் செய்ய வில்லை. பொருளை உற்பத்தி செய்கிற மாநிலத்துக்கும், பயன்படுத்துகிற மாநிலத்துக்கும் இடையே கருத்து ஒற்றுமை நிலவவேண்டும் என்ற திருத்தத்தை மட்டுமே சேர்த்துள்ளோம்.

சரக்கு, சேவைவரி கவுன்சிலில், மாநில அரசுகளின் ஓட்டுரிமையை நான்கில் மூன்றுபங்காக உயர்த்த வேண்டும் என்று காங்கிரஸ் கேட்பதை ஏற்கமுடியாது. நாட்டின் வரி விதிப்பில், மத்திய அரசின் கருத்துக்கு மதிப்பு இருக்கக் கூடாது என்று காங்கிரஸ் கருதுகிறதா? பொருளாதார ரீதியாக மத்திய அரசு வாழக்கூடாதா? தனது மனதை போதியளவு செலுத்தாமல் இக்கோரிக்கையை காங்கிரஸ் வைத்துள்ளது.

தனது எதிர் மறை அணுகுமுறை, நாட்டுக்கும், அதன் பொருளாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை காங்கிரஸ் உணரவேண்டும். அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசை எதிர்த்தாலும், இந்த உண்மையை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும். தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி

Leave a Reply