தனியார் காடுகள்சட்டம் குறித்து கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கருத்துகளை அறியவேண்டும் என்று, தமிழகத்தை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குமரி முதல் குஜராத் வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தில்லியில் மத்திய வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தங்கவேல், கன்னியா குமரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், மத்திய சாலை போக்குவரத்து இணை அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: "கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் தனியார் காடுகள்சட்டம் (சுற்றுச்சூழல் பகுதி) குறித்து ஆய்வுசெய்ய வேண்டிய உயர் நிலைக்குழு அந்தப் பகுதியில் கள ஆய்வு செய்யாமலேயே தனியார்காடுகள் சட்டவரம்புக்கான சுற்றுச்சூழல் பகுதியை நிர்ணயித்திருப்பது வருத்தம் அளிக்கிறது.

இந்த முடிவால் குமரி மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிவாழ் மக்கள் பாதிக்கப்படுவர். குமரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களை தனியார் பாதுகாப்பு சட்ட பகுதி வரம்புக்குள் கொண்டுவர எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை சரியானது அல்ல.

தனியார் பட்டா நிலங்கள், விவசாய நிலங்கள், ரப்பர்தோட்டங்கள் ஆகியவை வனப்பகுதி வரையறைக்குள் ஏன் கொண்டுவரப்படுகிறது? இச்செயல் கண்டிக்கத்தக்கது. எனவே, சிறப்புக்குழு ஒன்றை அமைத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே இந்தவிஷயத்தில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்' என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

Leave a Reply