ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் நேற்று பி.எஸ்.எப் வீரர்கள் வந்துகொண்டிருந்த பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அவர்களை எதிர்கொண்டு தாக்கி, சண்டையில் வீரமரணம் அடைந்த ராக்கி என்ற வீரரைப்பற்றி நெஞ்சை உருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதம்பூர் தாக்குதலில் இரண்டுவீரர்கள் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளில் ஒருவன் கொல்லப் பட்டான். ஒருவன் உயிரோடு பிடிபட்டான்.

பிஎஸ்எப் வீரர்கள் வந்துகொண்டிருந்த பேருந்தில் ராக்கி என்ற வீரர் மட்டுமே கையில் ஆயுதம் வைத்திருந்தார்.

சாலையின் நடுவில் நின்றுகொண்டு பேருந்து மீது தாக்குதல் நடத்துவதை பார்த்ததும் ராக்கி பதில் தாக்குதல் தொடுத்தார்.

பயங்கரவாதி சுட்டதில் பேருந்து ஓட்டுநர் சுபேந்துராய்க்கு காயம் ஏற்பட்டது.சுபேந்து ராய், கதவை திறக்க முயன்ற பயங்கரவாதி, கதவைதிறக்க முடியாத வகையில் தடுக்க முயன்றார்.

ஆனால், பயங்கரவாதியில் ஒருவன், பேருந்துகதவை திறந்து கொண்டு உள்ளே வந்ததும், அவனை நோக்கி ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுதாக்கினார்.

பயங்கரவாதியை நோக்கி அவர் சுட்டதில், அவரது துப்பாக்கியில் இருந்த அனைத்து தோட்டாக்களும் காலியாகிவிட்டன.

ராக்கியின் இந்த தாக்குதலைப்பார்த்த மற்றொரு பயங்கரவாதி அங்கிருந்து தப்பியோடினார்.

பயங்கர வாதிகளை எதிர்த்து போராடியபோது ராக்கியின் உடலில் குண்டுகள் துளைத்தன. எனினும், உயிர் மூச்சு இருக்கும்வரை அவர் பயங்கரவாதிகளை நோக்கி தாக்குதல் நடத்தினார்.

அவரது வீரதீர செயலால்தான், மற்ற பிஎஸ்எப் வீரர்கள் அனைவரும் உயிர்தப்பினர். இல்லை என்றால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கும்.

உதம்பூர் தாக்குதலில் உயிரிழந்த ராக்கி மற்றும் சுபேந்துராயின் உடலுக்கு பிஎஸ்எப் வீரர்கள் இன்று கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply