தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடத்திய தே.மு. தி.க. தலைவர் திரு விஜயகாந்த் அவர்களை கைது செய்தது, ஜனநாயக குரலை நசுக்குகிற செயலாகும். இது கண்டனதிற்குரியதாகும்.

இன்று (6-8-2015), அப்போராட்டத்திற்கு அனுமதி வேண்டும் என்று தே.மு. தி.க. சார்பில் முன்பே செய்திருந்த மனுவை தமிழக காவல்துறையினர் நிராகரித்துள்ளனர். எனவே, உயர் நீதி மன்றத்தில் போராட்டத்திற்கு அனுமதி கோரி அக்கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து எந்த உத்தரவும் பெறப்படாத நிலையில், ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி, இன்று திரு. விஜயகாந்த் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

அமைதியாக நடைபெற்ற அப்போராட்டத்தை அடக்கி ஒடுக்கும் வகையில் காவல் துறையினர் திரு. விஜயகாந்த், திருமதி. பிரேமலதா ஆகியோரையும் மற்றும் ஏராளமான தொண்டர்களையும் கைது செய்திருக்கிறார்கள். அப்போது, தொண்டர்கள் மீது, காவல் துறையினர் தடியடி பிரயோகம் செய்திருப்பது, பெரிதும் வேதனைக்குரிய மிகவும் கண்டிக்கத்தக்க நடவடிக்கையாகும்.

பல மணி நேரத்திற்கு பிறகு, அவர்கள் விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள் என்றாலும் கூட, தமிழகத்தில் இன்றைக்கு பூதாகரமாக எழுந்துள்ள மதுவிலக்கு வேண்டும் என்ற அனைத்து மக்களின் ஒருமிக்க கருத்துக்கு வலுவூட்டும் வகையில் போராட்டம் நடத்திய திரு. விஜயகாந்த் மற்றும் தொண்டர்களை கைது செய்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

அரசியல் கட்சிகள் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இது போன்ற தங்களது ஜனநாயக கடைமைகளை செய்ய இனிமேலும் தமிழக அரசு தடையாக இருந்திட கூடாது என்பதை தெரிவித்துகொள்கிறேன்.

Leave a Reply