1905-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி சுதேசி இயக்கம் தொடங்கபட்டது. நமது பெருமை மிக்க விடுதலை போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக இந்தநிகழ்வு நினைவு கூறப்படுகிறது. இந்நாளில்தான் இறக்குமதி செய்யப்பட்ட துணிகளை இந்தியர்கள் தீயிட்டு எரித்தனர். எனவே, கைத்தறியோடு நெருங்கிய தொடர்புகொண்ட இந்த நாளையே தேசிய கைத்தறி தினமாக கொண்டாடுவது என்று நாம் முடிவு செய்துள்ளோம்.

தேசத்தின் விடுதலைக்கு சுதேசி இயக்கமும், கைத்தறியும் ஒருங்கிணைந்து மிகப் பெரிய தொண்டு செய்தன. இன்றும் நம்முடைய தேசத்தின் பெருமைக்கும், நமது தேசத்தின் சமூகபாதுகாப்புக்கும் கட்டாயமாக ஒரு மிகப்பெரிய பங்களிப்பை செய்துவருகிறது.

உலக பிரசித்திபெற்ற பற்பல கைத்தறி துறைகளுக்கு நம்முடைய நாடுதான் தாயகமாக திகழ்கிறது. அதில் சிலவற்றை குறிப்பிட வேண்டு மானால், தமிழ்நாட்டின் காஞ்சீபுரம், மேற்கு வங்காளத்தின் ஜர்தானி, மத்திய பிரதேசத்தின் சங்கேரி மற்றும் மகேஸ்வரி, அசாமின் முசா, குஜராத்தின் பட்டோலா, காஷ்மீரத்தின் கானி மற்றும் கட்டூஸ், ஆந்திர பிரதேசத்தின் போச்சம்பள்ளி ஆகியவற்றை கூறலாம். கைத்தறிதுறை பொருட்களை சந்தைப்படுத்தும் போது அதற்கே இயல்பான வலிமை பல உள்ளன.

கைத்தறி என்பது பெரும்பான்மையும் பருத்தி, பட்டு, கம்பளி, சணல் போன்ற இயற்கை இழைகளை பயன்படுத்துகிறது. ஆகவே, இது சுற்றுசூழலுக்கு நட்பானது. தாவர சாயங்களை அங்கப் பொருளாக பயன் படுத்தினால் இதனை மேலும் சுற்றுச் சூழலுக்கு நட்பானதாக ஆக்க முடியும். இன்று மக்கள் சுற்றுச் சூழலை பற்றியும், முழு உடல் ஆரோக்கியத்தை பற்றியும் பெரும்அக்கறை கொண்டுள்ளனர்.

இயற்கைக்கும், சுற்று சூழலுக்கும் மிகநெருக்கமாக இருக்கும் கைத்தறியை நாம் பயன்படுத்தி உள்நாட்டிலும், ஏற்றுமதியும் கைத்தறி பொருட்களை அதிகம் சந்தைப்படுத்த வேண்டும்.

எனக்கு ஒருபுத்தகத்தை ஒருவர் பரிசளித்தார். அந்த புத்தகத்தில் உலகத்தில் பல்வேறு பாகங்களிலும் சின்னச் சின்ன ஊர்களில் நெய்யப்படும் துணிகள் பற்றி, குறிப்பாக கைத்தறியை பற்றி பல்வேறு தகவல்கள் இருந்தன. ஏதோவொரு குக்கிராமத்தில் என்ன அழகானதுணி நெசவு செய்யப்படுகிறது என்ற விவரங்கள் இருந்தன.

ஆனால், எனக்கு அதிர்ச்சி. பலவகையான கைத்தறி துணிகளை நெசவுசெய்யும் இந்தியாவின் பெயர் அந்த புத்தகத்தில் காணப்பட வில்லை. இதற்கு காரணம், நாம் நம்முடைய பொருட்களுக்கு பிராண்டு பெயர்களை தரவில்லை. குளோபல் பிராண்டிங் என்பது நமக்கு இல்லை. நம்முடைய பொருட்களுக்கு குளோபல் மார்க்கெட்டிங் கிடைக்கவில்லை. இந்திய கைத்தறிகளுக்கு பிராண்ட் கிடைத்தால் தான் குளோபல் மார்க்கெட்டில் நமக்கு உயர்ந்த இடம் கிடைக்கும்.

பல முயற்சிகளில் நாம் கைத்தறியை உயர்த்தவேண்டும். இந்தியாவில் பேஷனை பிரபலப்படுத்துவதை திரைத்துறைக்கு முக்கிய பங்குண்டு என்பதை நான் நன்கு அறிவேன். சென்னை நகரம் திரைத் துறையில் மிக முக்கியமான மையம். நம் திரையுலக அன்பர்கள் குறைந்தபட்சம் 10 திரைப்படங்களில் ஒன்றிலாவது படம் முழுவதும் கைத்தறி, கைவினை மற்றும் காதியை மட்டுமே பயன்படுத்தினால் கைத்தறி உன்னத நிலையை அடையும்.

நம்முடைய திரைப்பட அன்பர்கள் தங்களுடைய திரைப்படங்களை பிரபலப்படுத்த எங்கெங்கேயோ போகிறார்கள். ஆனால் ஒரு திரைப்படத்திலாவது அதில் நடிப்பவர்கள் கைத்தறி பொருட்களை பயன்படுத்தி, காதியை மாத்திரம் பயன்படுத்தக்கூடியதாக அந்த திரைப்படம் அமையும் என்றால் கண்டிப்பாக சொல்கிறேன், நமது தேசத்தின் கோடானுகோடி மக்களும் அந்த திரைப்படத்தை பார்த்து ரசித்து பாராட்டுவார்கள்.

நம்முடைய நாட்டில் பல இடங்களில் கைத்தறி நெசவு மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. வாரணாசியில் கைத்தறியில் சிறப்பான இடத்தை பெறுகிறது. அதேபோல், தமிழகத்தில் காஞ்சீபுரம் உள்ளது. இதுபோன்ற நெசவுகளை குழுமங்களாக ஒன்றிணைத்து நூல், பொருட்களை கிடைக்க செய்வது, பொருட்களை சந்தைப்படுத்தி, ஒருங்கிணைந்து விற்பனை செய்வதுதான், இப்போது கைத்தறியை உயர்த்த புதிய முயற்சியாக நாம் மேற்கொள்ள இருக்கிறோம்.

இந்தியர்கள் அனைவரையும் விரைவிலேயே இணையதள மூலம் ஒன்றிணைக்கும் வகையில் டிஜிட்டல் இந்தியா இயக்கத்தினை சமீபத்தில் தொடங்கியுள்ளோம். தனக்கு தேவையான இளைய தலைமுறையினர் பெரும்பாலும் இ-வணிகம் மூலம் பெறுகின்றனர். இதனை அனைத்து குழுமங்களிலும் நாம் காணலாம். ஆகவே, கைத்தறி துணி விற்பனையிலும் இ-வணிகத்தை புகுத்தினால் நெசவாளர்களின் வாழ்க்கை மேம்படும். முந்தைய ஆண்டைய காலத்தை காட்டிலும் 2014-2015-ம் ஆண்டில் தேசிய கைத்தறி மேம்பாட்டு கழகம் 37.2 சதவீதம் கூடுதல் நூல் வழங்கியுள்ளது என்பதை நான் கேட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

நெசவாளர்கள் தங்களுடைய பணியிடங்களை அமைத்துக்கொள்ள தறி மற்றும் உபகரணங்கள் கொள்முதல் செய்ய நிதி உதவி இனி அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக மாற்றம் செய்யப்படும். அதேபோல, பிளாக் அளவில் கைத்தறி குழும மேம்பாட்டுக்கு மிகப்பெரிய முயற்சியை நாம் மேற்கொண்டுள்ளோம். முன்னதாக ஒரு கைத்தறி குழுமத்திற்கு 60 லட்சம் ரூபாய் உதவி வழங்கப்பட்ட இடத்தில், இனி கூடுதலாக மொத்தம் சேர்த்து 2 கோடி ரூபாய் வழங்கப்படும் என்கிற அளவுக்கு இந்த முயற்சி மேம்பட்டுள்ளது.

முத்ரா வங்கி திட்டத்தின் மூலம் கைத்தறி நெசவாளர்கள் பெருமளவில் பயன்பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன். கைத்தறியின் வளமைக்கு நல்ல முறையிலான சந்தைப்படுத்துதலோடு புதிய நவீன டிசைன் இருப்பதும் அவசியமாகும். அந்த வகையில் டிசைன் உருவாக்கம், கைத்தறி பொருள் சந்தைபடுத்துதல் ஆகிய துறைகளில் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்ய ஜவுளித்துறையை நான் கேட்டுக்கொள்கிறேன்.

இன்றைய விழாவோடு தேசிய கைத்தறி தினம் கொண்டாட்டங்கள் நின்றுவிடக்கூடாது. இதனை ஒரு தொடர் இயக்கமாக செய்ய வேண்டும். கைத்தறியை பிரபலப்படுத்துதல், நெசவாளர்களின் வாழ்க்கை சிறப்புகளை வளமைப்படுத்துதல் ஆகியவற்றை கொண்ட தொடர் இயக்கமாக இது இருக்க வேண்டும்.

கைத்தறியை நாம் உலக அரங்கத்தில் மிகப்பெரியதாக எடுத்துச்சென்று உலகத்தினுடைய வல்லரசோடு கைத்தறியையும் ஒரு பெரிய வலிமைமிக்க சக்தியாக மாற்ற வேண்டும். இந்திய நாட்டின் கைத்தறி சக்தியை ஒரு மிகப்பெரிய வலிமைமிக்க மகாசக்தியாக உலக அரங்கத்தில் உயர்த்த வேண்டும்.

உலகத்தில் பல்வேறு மூலைகளில் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என்று பல்வேறு மூலைகளிலும் ஒருங்கிணைக்கப்பட்ட ஊடும் பாவுமாக இந்த கைத்தறியின் வலிமை நிலைக்க வேண்டும்.

நம்முடைய கைத்தறியின் ஊடு பாகு 'ஜீரோ டிபெக்ட் ஜீரோ இபெக்ட்' என்ற வகையில் அமையவேண்டும். அதாவது, உற்பத்தியில் எந்த வித குறைபாடும் இருக்கக்கூடாது. சுற்றுச்சூழலை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது. இந்த முறையில் ஊடு பாகாக அமைய வேண்டும்.

நான் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக அரசுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

Leave a Reply