நிலுவையில் உள்ள புதிய ஊதியமாற்று ஒப்பந்தம், ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், வாரிசு தாரர்களுக்கு பணி உள்பட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி என்எல்சி.(நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்) ஊழியர்கள் கடந்தமாதம் 20-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில்

ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரச்சினையில் சுமுகதீர்வு காண்பதற்காக கடந்த ஜூலை மாதம் 22, 27 மற்றும் கடந்த 5 ஆகிய தேதிகளில் என்.எல்.சி. தொழிற் சங்கம், நிர்வாகம், தொழிலாளர் நல ஆணையம் தரப்பில் முத்தரப்பு பேச்சு வார்த்தையும், கடந்த 3-ந் தேதி என்.எல்.சி. தொழிற்சங்கம், நிர்வாகம் தரப்பில் இருதரப்பு பேச்சு வார்த்தையும் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன. இந்நிலையில் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக என்எல்சி. தொழிற்சங்க கூட்டமைப்பினர் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சென்னை துறைமுகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் நேற்று மாலை 5.30 மணியளவில் சந்தித்துபேசினர். இந்த சந்திப்பு இரவு 7.10 மணியளவில் முடிவடைந்தது. இதன் பின்னர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் என்எல்சி. தொழிற்சங்க நிர்வாகிகள் வெளியே வந்தனர்.

அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறும்போது, 'என்.எல்.சி. தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தரதீர்வு காண்பதற்காக மத்திய மின்சாரம் மற்றும் நிலக்கரி துறை மந்திரி பியூஷ்கோயலை சந்திக்க அனுமதி கேட்டுள்ளேன். 11-ந் தேதி(நாளை) தொழிற் சங்க நிர்வாகிகள் டெல்லியில் பியூஷ் கோயலை சந்திக்க ஏற்பாடுசெய்வேன். இந்த சந்திப்பில் நானும் கலந்துகொள்வேன். என்.எல்.சி. தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிசெய்வேன்' என்றார்.

தொ.மு.ச. பொதுச் செயலாளர் ராஜ வன்னியன் நிருபர்களிடம் கூறும்போது, 'எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அனைத்துகட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளோம். அவரை சந்தித்துபேசிய பின்னர் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று ஓரளவு நம்பிக்கை வந்துள்ளது. இது தொடர்பாக திமுக. தலைவர் கருணாநிதியை சந்தித்துபேச அனுமதி கேட்டுள்ளோம்' என்றார்.

Leave a Reply