மத்திய பிரதேசத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அண்மையில் நடந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து, வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர் சிவராஜ்சிங் செüஹான் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

ம.பி.,யின் 10 நகராட்சி அமைப்புகளுக்கு கடந்த 12-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. மத்தியப் பிரதேசத் தொழில்கல்வி தேர்வுவாரிய முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பின்னடைவு ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. விமர்சகர்களின் கணிப்பைத் தவிடுபொடியாக்கும் விதமாக 8 நகராட்சி அமைப்புகளில் பாஜக வெற்றியை வசப்படுத்தியுள்ளது. காங்கிரஸ், சுயேச்சை வேட்பாளர்கள் தலா ஒரு இடத்தில் வெற்றிபெற்றனர்.

தேர்தல்வெற்றி குறித்து பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாவது:

மத்தியப் பிரதேச உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்முடிவுகள் மகிழ்ச்சியளிக்கின்றன. பாஜக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கட்சியின் வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள் என மோடி குறிப்பிட்டுள்ளார்.

மாநில முதல்வர் சிவராஜ்சிங் செüஹான் இது தொடர்பாக தெரிவித்திருப்பதாவது:

பாஜக மீது வைத்துள்ள நம்பிக்கைக்காகவும், எங்களுக்கு அளித்துவரும் ஆதரவுக்காகவும் மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மத்திய பிரதேசம் வளர்ச்சிப்பாதையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. இங்கு எதிர் மறை அரசியலுக்கு இடமே இல்லை. இதை எதிர்க்கட்சிகள் விரைவில் புரிந்து கொள்வார்கள் என்று சிவராஜ்சிங் கருத்து வெளியிட்டுள்ளார்.

மொரீனா, உஜ்ஜைனி, ஹர்தா, சாக்காட், பைன்ஸ்தேஹி, கோடார், சுவாசாரா, விதிஷா ஆகிய நகராட்சி அமைப்புகளை பாஜக கைப்பற்றியுள்ளது. சாரங்க்பூரில் காங்கிரஸ் வேட்பாளரும், குவாராவில் சுயேச்டை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அடைந்துள்ள வெற்றியானது வளர்ச்சிசார்ந்த அரசியலையே காட்டுகிறது. சோனியாவும், ராகுலும் தங்களை சுயபரி சோதனை செய்துகொள்ள வேண்டும். அவர்கள் இருவரும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று பாஜக செய்தித்தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

Leave a Reply