பிகார் தலைநகர் பாட்னாவில் மாநிலஅரசு விருந்தினர் இல்லத்தில் உள்ள மின் தூக்கி (லிப்ட்) நடுவழியில் பழுதாகி நின்றதால், அதிலிருந்த பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா சுமார் 40 நிமிடங்கள் சிக்கி தவித்தார். இது தொடர்பாக பிகார் அரசு மீது பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் மங்கள்பாண்டே செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பாட்னா அரசு விருந்தினர் இல்லத்தில் கீழ்த்தளத்தில் இருந்து, மேல் தளத்துக்கு மின்தூக்கியில் அமித் ஷா வியாழக்கிழமை இரவுசென்றார். அவருடன் பிகார் மாநிலத்துக்கான பாஜக மேலிட பொறுப்பாளர் பூபேந்திர யாதவ் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன்சென்றனர்.

அப்போது அந்த மின்தூக்கி பாதிவழியில் திடீரென நின்றுவிட்டது. இதனால் மின் தூக்கியில் இருந்த அமித் ஷாவும் உள்ளேயே சிக்கிக் கொண்டார். அவருக்கு இசட்பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்புக்காக வந்திருந்த துணை ராணுவப் படைவீரர்கள் மின்தூக்கியை உடைத்து அவரையும், பாஜக நிர்வாகிகளையும் பத்திரமாக மீட்டனர். இதனால் சுமார் 40 நிமிடங்கள்வரை, மின்தூக்கிக்குள் அமித் ஷாவும், பாஜக நிர்வாகிகளும் சிக்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று மங்கள்பாண்டே கூறினார்.

"எதிர் தரப்பினர், பாஜகவை தொடர்ந்து விமர்சிக்கின்றனர். இந்நிலையில் பாஜக தலைவர் அமித்ஷா, மின்தூக்கியில் சிக்கியுள்ளார். ஆதலால் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் சதி இருப்பதை மறுப்பதற்கு இல்லை'' என பாஜக மூத்த தலைவர் பிசி. தாக்குர் தெரிவித்தார்.

Leave a Reply