மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சிஅருகே தங்கியிருப்பதற்கான வலுவான ஆதாரம் கிடைத் துள்ளதால், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தி உள்ளது.

மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு நடை பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டவர் தாவூத் . சர்வதேச தீவிரவாதி என அறிவிக்கப்பட்டு இருக்கும் அவருக்கு எதிராக இன்டர் போல் அதிகாரிகளால் கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவால் தேடப்பட்டுவரும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தங்கியிருப்பதற்கான ஆதாரங்களை அடிக்கடி இந்திய உளவுத் துறை வெளியிட்டு வருகிறது. இவற்றை பாகிஸ்தானுக்கு வழங்கி, தாவூத்தை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு மத்திய அரசும் கோரிக்கை விடுத்துவருகிறது.

ஆனால் இந்த ஆதாரங்கள் அனைத்தையும் நிராகரித்துவரும் பாகிஸ்தான், தாவூத் இப்ராகிம் தங்கள் நாட்டில் இல்லை என தொடர்ந்து சாதித்துவருகிறது. இது இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பெரும் பின்னடைவாக இருந்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானின் கராச்சி அருகே உள்ள கிளிப்டன் நகரில் தாவூத் இப்ராகிம் வசிப்பதற்கான வலுவான ஆதாரங்களையும், அவரது தற்போதைய புகைப்படம் ஒன்றையும் இந்திய உளவுத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

மேலும் தாவூத்தின் மனைவி மெஜாபீன்ஷேக் பெயரிலான தொலைபேசி ரசீதும் (கடந்த ஏப்ரல் மாதத்துக்குரியது) உளவுத் துறையினரிடம் சிக்கியுள்ளது. அந்த ரசீதில் டி–13, பிளாக்–4, கராச்சி முன்னேற்ற ஆணையம், செக்–5, கிளிப்டன் என்ற முகவரி உள்ளது.

இந்த தொலைபேசி எண்ணில் இந்திய தொலைக் காட்சி நிருபர் தொடர்பு கொண்டார். அப்போது எதிர்முனையில் ஒருபெண் எடுத்து பேசினார். அவரிடம், 'நீங்கள், தாவூத்தின் மனைவி மெஜாபீன் ஷேக்தானா?' என நிருபர் கேள்வி எழுப்ப, அந்தபெண்ணும், 'ஆம்' என்பது போல பதிலளித்தார்.

பின்னர் அந்த பெண்ணிடம், தாவூத் குறித்து நிருபர் விசாரித்த போது, அவர் தூங்குவதாக கூறினார். எனினும் இந்த தொலைபேசி உரையாடல் திடீரென துண்டிக்கபட்டது.

சிறிது நேரத்துக்குப்பின் மற்றொரு நிருபர் அந்த தொலை பேசியில் தொடர்பு கொண்டார். அப்போது எதிர்முனையில் குரல் தெளிவில்லாமல் கேட்டதோடு, அந்தநிருபரை, பின்னர் தொடர்பு கொள்ளுமாறும் அந்த பெண் கேட்டுக்கொண்டார்.

இந்த 2 உரையாடல்கள் அடங்கிய 'டேப்'களை அந்த தொலைக் காட்சி நிறுவனம் தற்போது வெளியிட்டு உள்ளது.

இதைப்போல கிளிப்டன் நகரை சேர்ந்த 2 முகவரிகளை வைத்து 3 பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுகளை தாவூத் இப்ராகிம் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 6ஏ, கயாமன் டென்சீம், நிலை–5, பாதுகாப்புத்துறை குடியிருப்பு பகுதி என்ற முகவரியிலும், மொயின் பேலஸ், 2–வது மாடி, அப்துல்லா ஷா காஜி தர்கா அருகில், கிளிப்டன் என்ற முகவரியிலும் பாஸ்போர்ட்டுகளை தாவூத் இப்ராகிம் வைத்துள்ளார்.

மேலும் கடந்த 2013–ம் ஆண்டில் தாவூத் இப்ராகிம், கராச்சியில் சொத்து வாங்கியிருப்பதை இந்திய உளவுத்துறை கண்டுபிடித்து உள்ளது. முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ சர்தாரியின் வீட்டுக்கு அருகே இந்த சொத்து அமைந்துள்ளது.

இதன் முகவரி ஷிரீன் ஜினா காலனி, ஜியாயுத்தீன் மருத்துவமனை அருகில், கிளிப்டன், கராச்சி என்பதாகும். தாவூத்தின் மருத்துவ சிகிச்சைக்காக, மருத்துவமனை அருகே உள்ள இந்த வீடு வாங்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

இத்துடன் தாவூத்துக்கு சொந்தமான 9 வீடுகளின் முகவரிகளை இந்திய உளவுத்துறை சேகரித்து உள்ளது. இதில், இஸ்லாமாபாத்தில் உள்ள வீட்டு எண் 29, தெரு எண்–22, மர்கபா சாலை, ஐ.எஸ்.ஐ. பாதுகாப்பு இல்லம் என்ற முகவரியும் அடங்கியுள்ளது. இந்த வீடுகளில் தாவூத் இப்ராகிம் தனது வாழ்விடத்தை அடிக்கடி மாற்றி மாற்றி அமைத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

இத்தகைய வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ளதால், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும் என பா.ஜனதா கூறியுள்ளது. இது 'மறுக்கமுடியாத ஆதாரம்' என பாஜக செயலாளர் சித்தார்த் நாத்சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து மத்திய மந்திரியும், பா.ஜ,க மூத்த தலைவருமான வெங்கையா நாயுடு கூறுகையில், 'தாவூத் தங்கள் நாட்டில் வசிப்பதை, பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்துவருகிறது. ஆனால் தற்போது வலுவான ஆதாரத்தை நாங்கள் உலகுக்கு காட்டியுள்ளோம். இதை கண்டிப்பாக உணர்ந்துகொண்டு, அவரை உடனே இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்' என்றார்.

இதற்கிடையே முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்கே சிங் தனியார் டிவிக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது: வாஜ்பாய் பிரதமராக இருந் தபோது, நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை அதிரடி நடவடிக்கை எடுத்துதாக்க முயற்சி செய்யப்பட்டது. இந்த திட்டத்தில், சோட்டா ராஜனையும் தாக்கவும் முடிவுசெய்யப்பட்டது. ஆனால், மும்பை போலீசில் உள்ள சிலர் இதனை கெடுத்து விட்டனர் என கூறியுள்ளார்.

Leave a Reply