உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில் நிறுவுவதற்காக, மாமல்ல புரத்தில் தயாராகிவரும் திருவள்ளுவர் சிலை ஒப்படைப்பு விழா சென்னையில் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழ்மொழியின் மீது ஆர்வம் உள்ளவர் என்ற அடையாளத்துடன் பாஜகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண்விஜய் தமிழ்நாட்டில் அறியப்படுகிறார்.

தமிழுக்காக நாடாளு மன்றத்தில் குரல்கொடுத்தது மட்டுமன்றி, உயர் நீதி மன்றத்தில் தமிழ் மொழியில் வழக்காட உரிமை வேண்டும், பாரதியாருக்கு அவர் காசியில் வாழ்ந்த வீட்டில் நினைவிடம் அமைக்க வேண்டும். திருவள்ளுவர் பற்றி வடமாநிலங்களில் உள்ள பள்ளிகளில் பயிற்றுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வட மாநிலங்களில் பிரசாரம் செய்து வருகிறார்.

மேலும், திருவள்ளுவர் சிலையை கங்கை நதிக் கரையோரம் அமைக்கவும் அவர் ஆர்வம்காட்டி வருகிறார்.

இதையடுத்து, உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் பக்தர்கள் புனிதநீராடும் கங்கை நதிக் கரைப் பகுதியில் திருவள்ளுவர் சிலையை அமைக்க அந்த மாநில அரசிடம் அனுமதி கோரினார்.

கங்கை நதிக் கரையோரப் பகுதிகளின் பராமரிப்பை உத்தர பிரதேச மாநில அரசு கவனித்து வருகிறது. எனவே, உத்தரகண்ட் அரசு அறிவுறுத் தலின்படி உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், அந்த மாநிலத்தில் ஆளும் சமாஜவாதி கட்சியின் பொதுச்செயலர் ராம்கோபால் யாதவ் ஆகியோரைச் சந்தித்து திருவள்ளுவர் சிலை அமைக்க நிலம் ஒதுக்க அவர் அனுமதி கோரினார். அவரது கோரிக்கையை ஏற்று சிலையை நிறுவுவதற்கான நிலத்தை ஒதுக்கி அந்தமாநில அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே, தருண் விஜய்யின் முயற்சியை ஆதரிக்கும் வகையில், திருவள்ளுவர் திரு நாட்கழகம் உதவியுடன் மாமல்லபுரத்தில் திருவள்ளுவர் சிலைத் தயாரிப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன.

இந்தச் சிலையை அமைப்பதற்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிமேம்பாட்டு நிதியில் இருந்தும் நிதி ஆதாரத்தை பகிர்ந்து கொண்டுள்ளதாக தருண்விஜய் தெரிவித்துள்ளார்.

இந்த சிலையை ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருவள்ளுவர் திநாட் கழகம் சார்பில் சென்னை, திநகர் வாணி மகாலில் உள்ள மகா சுவாமிகள் அரங்கில் வரும் 27-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.

Leave a Reply