எகிப்துவாழ் இந்தியர்களிடையே, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திங்கள்கிழமை உரையாற்றுகையில், தாய்நாட்டில் முதலீடுசெய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

எகிப்துக்கும், ஜெர்மனிக்கும் நான்கு நாள் அரசு முறை பயணமாக புறப்பட்ட சுஷ்மாஸ்வராஜ், முதலில் எகிப்து சென்றுள்ளார். அந்நாட்டுத் தலைநகர் கெய்ரோவில் இந்திய வம்சாவளியினரிடையே அவர் திங்கள்கிழமை உரையாற்றினார். அவர் பேசியதாவது:

இந்தியாவில் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தனிச்சிறப்புமிக்க மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நாட்டை மிக உயர்ந்து இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு மோடி அரசு செயல்படுகிறது.

இந்தியாவில் தொழிலுக்குச் சாதகமான சூழல் நிலவுகிறது. விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு கடந்த 15 மாதங்களாக உறுதிமிக்க நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. வெளிநாட்டு உறவுகளை மேம்படுத்துவதிலும் நாங்கள் வெற்றி அடைந்திருக்கிறோம். எங்களின் நட்பு வட்டம் அதிகரித்திருக்கிறது.

வெளிநாடுவாழ் இந்தியர்கள்…: இந்தியாவுக்கு வெளியே வாழும் இந்தியர்களின் நலனுக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, எகிப்து உள்ளிட்ட வளைகுடா பகுதியில் வாழும் இந்தியர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

நமது நாட்டின் மாற்றத்துக்கு வெளிநாடுவாழ் இந்திய சமூகத்தினரின் பங்கு தவிர்க்கமுடியாதது. வளர்ச்சி இலக்கை எட்டுவதில் நீங்கள் இந்திய அரசுடன் இணைந்து செயல்படவேண்டும்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து குடியேறியுள்ள நீங்கள் அனைவரும் நாட்டின் வெவ்வேறு கலாசாரங்களைப் பிரதிபலிக்கிறீர்கள். ஹோலி, தீபாவளி, தசரா, ரம்ஜான் ஆகிய பண்டிகளை நீங்கள் சரிசமமாகப் பாவித்துக் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களது செயல்பாடுகளால் நாங்கள் பெருமையடைகிறோம்.

இந்தியாவின் எரிபொருள் தேவை, தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தப் பிராந்தியங்களின் பங்கு முக்கியமானது என்றார் சுஷ்மா

Leave a Reply