சர்வதேச கடற்படை கண்காட்சியின் போது, பிரதமர் நரேந்திர மோடி, நீர்மூழ்கி கப்பலில் பயணம்செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசாகப்பட்டினத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி சர்வதேச கடற்படை கண்காட்சி தொடங்குகிறது. இந்த கண் காட்சியை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தொடங்கி வைக்கிறார்.

இந்த கண்காட்சியில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் தவிர்த்து 90 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட 46 நாடுகள் இதில் கலந்துகொள்வதை உறுதி செய்துள்ளன.

இந்த கண்காட்சியின் போது (அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந்தேதி) பிரதமர் நரேந்திர மோடி நீர்மூழ்கி கப்பலில் பயணம்செய்ய உள்ளார். இதன் மூலம் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்யும் 2-வது பிரதமர் என்ற பெயரை மோடி பெறுகிறார்.

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, 1988-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 3-ந்தேதி ஐ.என்.எஸ். சக்கரா நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த போது, அந்த கப்பலில் பயணம் செய்தார். அதன் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்யப்போவது இதுவே முதல் முறை.

பிரதமர் மோடி, முற்றிலும் இந்தியாவில் கட்டப்பட்ட ஐஎன்எஸ். அரிஹந்த் அணு நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கடல்சோதனைகள் நடைபெற்று வருகின்றன. ஒருவேளை ஐ.என்.எஸ். அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலின் கடல் சோதனைகள் முடிவு அடையா விட்டால், பிரதமர் மோடி ஐ.என்.எஸ். சக்கரா நீர்மூழ்கி கப்பலில் கடலுக்கடியில் பயணம்செய்வார் என கடற்படை வட்டாரங்கள் கூறுகின்றன.

பிரதமர் மோடியுடன் நீர்மூழ்கி கப்பலில் கடற்படை தளபதி ஆர்கே. தோவனும் பயணம் செய்வார் என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Leave a Reply