தேர்தல் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் மக்கள் மன நிலையை மாற்ற முயற்சி செய்துள்ளார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்ட சபை தேர்தலுக்கு முன்னோட்டமாக லயோலா கல்லூரி கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. தமிழகத்தின் 28 மாவட்டங்களில் 80 சட்டசபை தொகுதிகளில் கடந்த 13-ந் தேதி முதல் 26-ந்தேதி வரை 3,320 பேரிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

அந்தக் கருத்துக் கணிப்பின் முடிவின்படி தமிழகத்தில் சட்ட சபை தேர்தலில் மீண்டும் அதிமுக வெல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அதில், பாஜகவும், பாமகவும் 3 சதவீத மக்கள் ஆதரவை பெற்று சமபலத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கருத்துக் கணிப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தற்போது வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கணிப்பு குறுகிய வட்டத்துக்குள் சிலரிடம் கருத்து கேட்கப் பட்டுள்ளது. இதன் முடிவை நம்ப முடியாது. சிலரது இமேஜை உயர்த்த திட்டமிட்டு வெளியிட்ட கருத்துக் கணிப்பாகவே தோன்றுகிறது.

மக்கள் ஆராய்ந்து முடிவுசெய்ய இன்னும் காலம் இருக்கிறது. ஆனால் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் மக்களின் மனநிலையை மாற்ற முயற்சி செய்துள்ளார்கள்.

Leave a Reply