”கறுப்புபணம் பதுக்கலை ஒடுக்கும் வகையில், வரி ஏய்ப்பு செய்பவர்கள் மற்றும் வரி செலுத்தாமல் தவிர்ப்பவர்கள் பற்றிய விவரங்கள், தானி யங்கி தகவல் பரிமாற்ற முறையில் உலக நாடுகளிடையே பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்” என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி வலியுறுத்தியுள்ளார். சர்வதேச நிதியத்தின் ஆண்டு கூட்டம் மற்றும் உலகவங்கி கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஐந்து நாள் பயணமாக, கடந்த 7ம் தேதி தெற்கு அமெரிக்காவில் உள்ள பெருநாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்.

தலைநகர் லிமாவில் நடைபெற்ற காமன் வெல்த் நாடுகளைச் சேர்ந்த நிதியமைச்சர்களின் 49வது ஆண்டு கூட்டத்தில் உள் கட்டமைப்புகளுக்கு நிதி, சிறு நாடுகளுக்கு வர்த்தக நிதி யுதவி செய்வது ஆகியவை குறித்து ஆலோசனை நடந்தது.

கூட்டத்தில் அருண்ஜெட்லி பேசியதாவது: சர்வதேச அளவில் வரி ஏய்ப்பு செய்பவர்கள், வரி செலுத்தாமல் தவிர்ப்பவர்கள் ஆகியோரை பற்றி தானி யங்கி முறையில் தகவல் பகிர்ந்து கொள்ள எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் வகையில் ‘பொதுஅறிக்கை விவரப் பட்டியல்’ அமல்படுத்த வேண்டும். வரி ஏய்ப்பு செய்வதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் உத்திகளை களையவும், வரிஏய்ப்பு நிறுவனங்கள் பற்றி தானியங்கி தகவல் பரிமாற்றங்கள் செய்துகொள்ளப்பட வேண்டியதும் முக்கியமானதாகும்.

அதனால், உலக நாடுகளிடையே வரி சீரமைப்பு மாற்றங்கள் (பிஇபிஎஸ்) கொண் வர பொருளாதார வளர்ச்சி மேம்பாட்டுக்கான அமைப்பு (ஓபிசிடி) மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை காமன்வெல்த் நாடுகள் அமல்படுத்த வேண்டிய முக்கியத்துவத்தை உணர வேண்டும். இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது, சர்வதேசவரி விதிகளில் காணப்படும் ஓட்டைகள் அடைக்கப்பட்டு, வரி ஏய்ப்பு செய்பவர்கள் பற்றி அரசு கவலைகொள்ளாத அளவுக்கு தீர்வுகிடைக்கும். அதோடு, வரியே செலுத்தாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதித்து, பொருளாதார வளர்ச்சியை குறைப்பது பெருமளவு கட்டுப்படுத்தபடும். இவ்வாறு அருண்ஜெட்லி பேசினார்.

Leave a Reply