2017 – 18 மத்திய பட்ஜெட் 10 முக்கிய கருப்பொருளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்தார்.

1. விவசாயிகள் நலன் 2. கிராமப்புற மக்கள் நலன் 3. இளைஞர் மேம்பாடு 4. ஏழை, எளிய மக்களின் ஆரோக்கியத்தை பேணுதல் 5. உட்கட்டுமான மேம்பாடு 6. வலுவான நிறுவனங்களுக்கு பிரத்யேக நிதித்துறை 7. பொது சேவை 8. பொறுப்புகளை துரிதமாக செயல்படுத்துதல் 9. நேர்மையானவர்களுக்கு ஏற்ற வரிவிதிப்பு 10. விவேகமான நிதி மேலாண்மை ஆகிய 10 கருப்பொருளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

* வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஒரு கோடி குடும்பங்களை ஏழ்மையிலிருந்து மீட்க புதிய திட்டம் வகுக்கப்படுகிறது.

* உற்பத்தித் துறையில் இந்தியா தற்போது 6-வது இடத்தில் இருக்கிறது. முன்னதாக 9-வது இடத்தில் இருந்தது. இந்திய பொருளாதாரம் வியத்தகு சீர்திருத்தங்களைக் கண்டுள்ளது.

* கறுப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு போர் தொடுத்திருக்கிறது.

* பண மதிப்பு நீக்கம் நீண்ட கால பலனைத் தரும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை சாத்தியமாக்கும். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். பல காலமாக நடந்துவந்த வரி ஏய்ப்பை பண மதிப்பு நீக்கம் தடுத்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையால் ஊழல் குறைந்திருக்கிறது.

நல்ல நோக்கங்கள் தோற்பதில்லை என்பது மகாத்மா காந்தியின் வாக்கு. அதன்படி கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையான பண மதிப்பு நீக்கம் ஒரு போதும் தோல்வியடையாது. பண மதிப்பு நீக்கத்தின் மூலம் ஜிடிபி உயரும், வரி வசூல் அதிகரிக்கும்.

* ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

* நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. இரண்டு இலக்கத்தில் இருந்த பணவீக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

காலை 11.08 மணியளவில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 3-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அருண் ஜேட்லி.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. முதல் நாள் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அவையில் குழப்பம்:

இன்று காலை அவை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர் இ.அகமது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் அறிவிப்பு ஒன்றை வாசித்த மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், "வழக்கமாக அவை உறுப்பினர் மறைந்தால் அவை ஒத்திவைக்கப்படுவது மரபு. ஆனால், இன்று 2017 – 2018 பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது என ஏற்கெனவே குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் திட்டமிடப்பட்டதால் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதற்கு பதிலாக நாளை அவை ஒத்திவைக்கப்படும் என்றார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூன் கார்கே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடும் அமளிக்கு இடையே பட்ஜெட்டை காலை 11.08 மணிக்கு அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.

முதன்முறையாக..

மக்களவையில் 2017-2018-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலை 11.08 மணிக்கு தாக்கல் செய்தார். முதல் முறையாக பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல முதல்முறையாக பிப்ரவரி 28-க்குப் பதிலாக பிப்ரவரி 1-ம் தேதியே பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ட்விட்டரில் பதிலளிக்கிறார் ஜேட்லி:

பட்ஜெட் குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, "மக்களவையில் புதன்கிழமை பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். அதைத் தொடர்ந்து பட்ஜெட் தொடர்பாக ட்விட்டரில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply