2017- 2018 பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் இன்று (புதன்கிழமை) காலை 11.08 மணியளவில் தாக்கல் செய்தார். முதன்முறையாக பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

* ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் வருமானம் பெறும் தனி நபர்களுக்கு வருமான வரி விகிதம் 10%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்ச வரம்பில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் பெறுபவர்களுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படும்.

* பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக ரூ.1.84 லட்சம் கோடி ஒதுக்கப்பட உள்ளது.

'அரசியல் கட்சிகளுக்கான நன்கொடையில் வெளிப்படைத்தன்மை'

அரசியல் கட்சிகளுக்கான நன்கொடையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்த பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, அரசியல் கட்சிகள் இனி ரொக்கமாக ரூ.2000 மட்டுமே நன்கொடையாக பெற முடியும். இதுநாள் வரை ரொக்கமாக ரூ.20,000 வரை நன்கொடை பெறலாம் என்ற நடைமுறை இருந்தது. அதேவேளையில் அரசியல் கட்சிகள் காசோலை மூலமாகவோ டிஜிட்டல் பரிவர்த்தனையின் மூலமாகவோ நன்கொடை பெறத் தடை ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொக்கப் பண பரிவர்த்தனைக்கு கெடுபிடி:

ரூ.3 லட்சத்துக்கு மேலான பரிவர்த்தனையை ரொக்கமாக மேற்கொள்ள முடியாது. கறுப்புப் பண ஒழிப்புக்கான சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரையின்படி இந்த நடைமுறை அமல்படுத்தப்படவிருக்கிறது. இதற்கு ஏற்ப வருமான வரிச் சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்படும்.

டிஜிட்டல் பொருளாதாரம்:

ஊழலை ஒழிக்கவும், நிதிக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தவும் டிஜிட்டல் பொருளாதாரம் உதவும். தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.

மாபெரும் டிஜிட்டல் புரட்சிக்கான ஆரம்பப்புள்ளியில் இந்தியா இருக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பணமற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வகையில் 'பீம்' செயலி, போனஸைப் பரிந்துரை செய்யும் திட்டம் மற்றும் வணிகர்களுக்கு 'கேஷ் பேக்' திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.

125 லட்சம் மக்கள் பீம் செயலியைப் பயன்படுத்தினர். இந்த வருடம் மட்டும் கூடுதலாக 10 லட்சம் ஸ்வைப்பிங் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 2017-ல் 20 லட்சம் ஆதார் சார்ந்த பிஓஎஸ் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வரும்.

சாமானியர்கள் டிஜிட்டல் முறைக்கு மாறுவது ஏராளமான பயன்களை அளிக்கும். ஆர்பிஐயின் பழைய கட்டண ஒழுங்குமுறை வாரியம் புதிதாக மாற்றியமைக்கப்படும்.

* 1.5 லட்சம் துணை சுகாதார மையங்கள் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களாக மாற்றப்படும்.

ஏழைகளின் உடல்நலத்தைக் காக்கும் வகையில் அரசு ஒரு செயல்திட்டத்தைத் தயாரித்துள்ளது. 2025-க்குள் காசநோய் முழுமையாக ஒழிக்கப்படும்.

ஜார்க்கண்ட் மற்றும் குஜராத்தில் புதிதாக இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.

தாழ்த்தப்பட்டோருக்கு அளிக்கப்படும் நிதியுதவி ரூ. 52,393 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

* பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடுபவர்களின் சொத்துக்களை முடக்க புதிய சட்டம் இயற்றப்படும்.

* தலைமை தபால் அலுவலகங்களில் பாஸ்போர்ட் விநியோகிக்க வழிவகை செய்யப்படும்.

ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவுக்கு சேவைக் கட்டணம் ரத்து:

ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு சேவைக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. நாடு முழுவதும் 500 ரயில் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயன்படுத்தும் அளவுக்கு வடிவமைக்கப்படும். 2017 – 18 நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.1,31,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் ரூ. 51,000 கோடி அரசு பங்களிப்பாக இருக்கும். இந்த நிதியாண்டில் 3,500 கி.மீ. தூரத்துக்கு ரயில்வே இருப்புப் பாதை அமைக்கப்படும். கடந்த ஆண்டு 2,800 கி.மீ. ரயில் இருப்புப் பாதை அமைக்கப்பட்டது. 7,000 ரயில் நிலையங்கள் சூரிய மின் திட்டத்தின் கீழ் இயக்கப்படும். ரயில்வே வாரியத்தின் செலவினங்கள், ரயில்வே சேவை மீதான சமூக எதிர்பார்ப்புகள், சேவை தரம், ரயில்வே துறை எதிர்கொள்ளும் போட்டி ஆகியனவற்றின் அடிப்படையில் ரயில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும்.

உயர் கல்விக்கு நிதியுதவி:

உயர் கல்வியில் புதிய கண்டுபிடிப்புக்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். யுஜிசியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அங்கீகாரம், தரவரிசை மற்றும் தன்னாட்சி அந்தஸ்தின் அடிப்படையில் கல்லூரிகள் அடையாளம் காணப்படும்.

இளைஞர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் 'ஸ்கில் இந்தியா' திட்டம் 2015-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் நாடு முழுக்க 100 சர்வதேச இந்திய திறன் வளர் மையங்கள் நிறுவப்பட உள்ளன.

ஜவுளித்துறையில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் ஏற்கெனவே ஒரு சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல தோல் மற்றும் காலணி துறைகளிலும் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்.

கிராமப்புற மேம்பாடு:

கிராமப்புற மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பிரதான் மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் ரூ.27,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வரும் மார்ச் 2018-க்குள் அனைத்து கிராமப்புறங்களிலும் மின் வசதி செய்து தரப்படும். நாடு முழுவதும் ப்ளூரைடு பாதிப்புள்ள 28,000 குடிநீர் ஆதாரங்கள் அடுத்த 4 ஆண்டுகளில் சுத்தப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும். கிராமப்புற சுகாதாரம் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் பலமடங்கு அதிகரித்துள்ளது. கிராமங்களில் திறந்தவெளி கழிப்பிட பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது.

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்:

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பெண்களின் பங்களிப்பு 55% ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த நிதியாண்டில் (2016 – 2017) பெண்கள் பங்களிப்பு 40% ஆக இருந்தது. தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்த விண்வெளி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். 100 நாள் வேலைதிட்டத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வேளாண் துறைக்கான அறிவிப்புகள்:

இந்த நிதியாண்டில் வேளாண் துறை வளர்ச்சி 4.1% இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ராபி பருவத்தில் இந்த ஆண்டு பயிரிடப்பட்ட நிலப்பரப்பின் ஏக்கர் கணக்கு அதிகம். 2017 – 18 நிதியாண்டில் விவசாயிகள் கடன் இலக்கு ரூ.10 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 10 லட்சம் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் வேளாண் வருவாயை 5 மடங்கு அதிகரிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டிருக்கிறது. நீர்ப்பாசனத்துக்காக ரூ,40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 ஆண்டின் இறுதியில் 50,000 கிராம பஞ்சாயத்துகள் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும். நுண் சொட்டு நீர் பாசனத்துக்கு தொடக்க மூலதனமாக ரூ.5000 கோடி ஒதுக்கப்படுகிறது.

Leave a Reply