சுதந்திர போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நினைவு நாள் தியாகிகள் தினமாக திங்கள் கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலம், ஹுசைன் வாலாவில் அமைந்துள்ள அவர்களது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபிறகு மோடி பேசியதாவது:

2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வீட்டுவசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதற்குள், இந்தியாவில் வீடு இன்றித்தவிக்கும் ஏழைமக்கள் எவரும் கிடையாது என்ற நிலையை உருவாக்க விரும்புகிறோம்.

வரும் 2019-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை விமரிசையாக கொண்டாட அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் விடுதலைக்காக ஏராளான மானோர் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். அவர்களது தியாகத்துக்காக, தூய்மையான இந்தியாவை உருவாக்கி காட்டுவது நமது கடமையில்லவா?

நம் தாய்நாடு தூய்மையாக இருக்கவேண்டும். அனைவருக்கும் வாய்ப்புகள் உருவாகவேண்டும். இதற்கான நடவடிக்கைகளைத் தான் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்திய விவசாயிகளும், ஏழைமக்களும் முன்னேற்றமடைய வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். நம் மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

இவையெல்லாம் நிறைவேறாத வரை, சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகளுக்கு நாம்செலுத்தும் மரியாதை முழுமை யடையாது என்று மோடி பேசினார்.

Leave a Reply