குடியரசு துணைத்தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வெங்கய்யநாயுடு, தமக்கு ஆதரவளிக்கக் கோரி அனைத்து எம்.பி.க்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.


குடியரசு துணைத்தலைவர் தேர்தல் வரும் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிசார்பில் வெங்கய்ய நாயுடுவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சார்பில் கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக் கவுள்ளனர்.
இந்நிலையில், தமக்கு ஆதரவளிக்கக் கோரி, அனைத்து எம்.பி.க்களுக்கும் வெங்கய்யநாயுடு கடிதம் எழுதியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:


நமது அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகளிலும், கூட்டாட்சிதத்துவ கோட்பாடுகளிலும் நான் தீவிர நம்பிக்கை கொண்டவன். மத்திய அமைச்சராக பணியாற்றிய காலக் கட்டங்களில், தீவிர உழைப்பாலும் ஆர்வத்தாலும் புதியதிட்டங்களை உருவாக்குவதிலும், அதனை நடைமுறைப் படுத்துவதிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தேன். மத்திய அரசின் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதில், மாநில அரசுகளும் பங்காற்றுவதை உறுதிசெய்தேன்.


மாநிலங்களவையின் பங்களிப்பு: அரசியல் ஜனநாயகத்தின் தூணாகவிளங்கும் மாநிலங்களவை, புதிய இந்தியாவை கட்டமைப்பதில் பல்லாண்டுகளாக முக்கியபங்காற்றி வருகிறது. வளர்ந்து வரும் நாடு என்ற முறையில், வறுமை, எழுத்தறிவின்மை, பாலின பாகுபாடு, ஊழல் உள்ளிட்டவற்றை ஒழிக்கவேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. நாட்டுமக்கள் அனைவருக்குமான சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும்.


சுதந்திரத்துக்கு பின் நாட்டில் அமைந்த அனைத்து அரசுகளும் நாட்டின் வளர்ச்சியை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச்சென்றுள்ளன. ஆனால், இன்னமும் செய்ய வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. பயங்கரவாதம், பருவநிலை மாறுபாடு உள்ளிட்டவை நமக்கு பெரும்சவால்களாக உள்ளன.


குடியரசுத் துணைத்தலைவராக நான் பொறுப்பேற்றால், இந்திய குடியரசுத் தலைவரின் கரத்தை வலுப்படுத்துவதுடன், 'பன்முகத் தன்மையும், வேற்றுமையில் ஒற்றுமையுமே நமது நாட்டின் தூண்கள்' என்ற அவரது கருத்தின்படி செயலாற்றுவேன். குடியரசு துணைத்தலைவர் அலுவலகத்தின் மாண்பையும், நமது அரசியலமைப்பு பாரம்பரியத்தையும் பாதுகாப்பேன் என உறுதியளிக்கிறேன் என்று தனது கடிதத்தில் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.