உலகிலேயே மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரமாக இந்தியப்பொருளாதாரம் உள்ளது; எனவே 2040-ஆம் ஆண்டுக்குள் இந்தியப்பொருளாதாரம் 5 மடங்கு வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது'' என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.


தில்லியில் பெட்ரோலிய தொழில்நுட்பத்துறை தொடர்பான மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:


நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், எரிசக்திக்கு முக்கியப்பங்குள்ளது. நிலையான, ஸ்திரமான மற்றும் சரியான விலையிலான எரிசக்தியே, பொருளாதார வளர்ச்சியின் நற்பலன்களை கடைக் கோடி மக்களைச் சென்றடைய வழிவகுக்கும். இந்தியாவின் பொருளாதாரவளர்ச்சியில், ஹைட்ரோ கார்பன் (பெட்ரோலியம்) மிகவும் முக்கியப் பங்கை வகிக்கிறது.


வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்யை சார்ந்திருப்பதை குறைத்து, இந்தியாவிலேயே எண்ணெய், எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இதைக் கவனத்தில்கொண்டு, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்யின் தேவையை 2022-ஆம் ஆண்டுக்குள் 10 சதவீதம் குறைக்க நான் இலக்கு நிர்ணயித் திருக்கிறேன்.


ரஷியாவில் சுமார் ரூ. 38 ஆயிரம் கோடியை (5.6 பில்லியன் டாலர்கள்) இந்தியா முதலீடுசெய்துள்ளது. இது நமக்கு ஒன்றரை கோடி பெட்ரோலியத்துக்கான உரிமையாகத் திரும்ப கிடைக்கும்.இந்தச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, நமது நாட்டு நிறுவனங்கள் பிற நாடுகளைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்களோடு கூட்டு ஏற்படுத்திக்கொண்டு, அதிக அளவு பெட்ரோலியம் பெறுவதற்கான உரிமைகளை (பங்குகளை) கிடைக்கச் செய்ய வேண்டும்.


பன்னாட்டு நிறுவனங்களாக உயரவேண்டும்: இந்தியாவைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களாக மாறவேண்டும். இந்தியா- மத்திய கிழக்குப் பகுதி, இந்தியா- மத்திய ஆசியா, இந்தியா-தெற்காசியா எரிசக்தி தொகுப்புகளை இந்திய நிறுவனங்கள் உருவாக்க வேண்டும்.


சர்வதேச ஹைட்ரோ கார்பன் நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்யவேண்டும். "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் அந்நிறுவனங்கள் தொழில் தொடங்கவேண்டும். உலகிலேயே மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து நாடாக இந்தியா தற்போது உள்ளது. 2040-ஆம் ஆண்டுக்குள் இந்தியப்பொருளாதார வளர்ச்சி 5 மடங்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நீண்ட கால நலன்களைக் கருத்தில் கொண்டு வகுக்கப்படும் கொள்கைகளே அடிப்படையாகும். குறுகிய நோக்கத்துடன் தலைப்புச்செய்திகளாக வர வேண்டும் என்ற எண்ணத்துடன் வகுக்கப்படும் கொள்கைகள் தேவையில்லை.


இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் பொருள்உற்பத்தித் துறையின் பங்கு தற்போது 16 சதவீதமாக உள்ளது. இந்த அளவானது, 2020-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்தஉள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதமாக அதிகரிக்கும்.
மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரசக்தியாக நமது நாட்டு பொருளாதாரம் இருப்பதோடு மட்டுமல்லாது, பிற நாடுகளைக்காட்டிலும் மிகவும் ஸ்திரமானதாகவும் உள்ளது.


உலகப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவியகாலத்திலும் கூட, நமது நாட்டின் பொருளாதாரம் எந்தச் சவால்களையும் எதிர்கொள்ளும் நிலையிலேயே இருந்தது.எரிபொருள் அனைவருக்கும் கிடைக்கும்வகையில், உஜ்வலா என்னும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகளும், ஒருகோடி வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு அளிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.


இதேபோன்று, தேசிய எரிவாயுதொகுப்பை 30 ஆயிரம் கிலோ மீட்டர் என்ற அளவுக்கு அதாவது இரண்டுமடங்கு அதிகமாக்கி, இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மின்சார வசதி கிடைப்பதை அரசு உறுதி செய்யும் என்றார் பிரதமர் மோடி.

Leave a Reply