முத்தலாக் சட்ட விரோதமானது என்று சுப்ரீம்கோர்ட்டு அளித்த தீர்ப்பை இஸ்லாமிய பெண்கள் வரவேற்று வருகின்றனர். அந்தவகையில் தமிழக பாரதீய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணியைசேர்ந்த இஸ்லாமிய பெண்கள் ஏராளமானோர் கமலாலயத்திற்கு நேற்றுவந்தனர். அவர்கள் மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜனை சந்தித்து இனிப்புகளை வழங்கி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று பல கூட்டங்களில் பிரதமர் நரேந்திரமோடி பேசியுள்ளார்.

பிரதமரின் அயராத முயற்சியில் இஸ்லாமிய பெண்களின் கட்டுப்பாடு விலக்கப்பட்டுள்ளது. உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. முத்தலாக் சட்டவிரோதமானது என்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி நிரூபணமாகியுள்ளது.


நீட்தேர்வு வி‌ஷயத்தில் தமிழக அரசியல் வாதிகளும், தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள் மட்டுமே குழப்பங்களை விதைத்துக்கொண்டிருக்கிறார்கள். தேசியநீரோட்டத்திற்கு வர மறுக்கிறார்கள்.

போராட்டம் நடத்தும் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசரை நான் கேட்கிறேன். இம்முறை நீட்தேர்வு மூலமாக ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். இது உங்களுக்கு தெரியாதா?. மத்திய அரசு எதை செய்தாலும், சொன்னாலும், எந்த திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்ப்பு,போராட்டம் என்ற மனநிலை மாறவேண்டும். நல்லதை ஆதரிக்கும் துணிவுவேண்டும்.

அமித் ஷாவின் தமிழக வருகை திடீரென்று ரத்து செய்யப்பட்டதற்கு, தமிழக அரசியலில் நிலவியகுழப்பம் காரணம் அல்ல. அன்றைய தினம் டெல்லியில் முக்கியமான கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். விரைவில் அவர் தமிழகம் வர இருக்கிறார். தேதி முடிவானவுடன், அவரதுவருகை பற்றி விவரம் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.